SuperTopAds

ஈழத்திற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்த யாழ்.பல்கலை மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

ஆசிரியர் - Admin
ஈழத்திற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்த யாழ்.பல்கலை மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

தாய்லாந்தில் கடந்த-02 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியியல் புலமை கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்று மூன்று சர்வதேச விருதுகளையும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று ஈழத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார்.

SHOES HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்”, Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD விருதும், Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருதும், TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்குப் பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்”, Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD விருதும், Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருதும், WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டட நிர்மாணத் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்”, Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும் பெற்றுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மண்ணின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் கோரக்கன் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் தனது திறமையால் இதுவரை மூன்று சர்வதேச விருதுகளையும், 38 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் 86 கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்த இளம் விஞ்ஞானியாக இவர் திகழ்கிறார்.

இவர் கடந்த- 2018 ஆம் ஆண்டு மாசி மாதமும் தாய்லாந்தில் 97 நாடுகளின் 1800 பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றிய சர்வதேச அறிவியியல் புலமை மற்றும் கண்டுபிடிப்புக்கான கண்காட்சியில் பங்குபற்றியிருந்தார். இந்தக் கண்காட்சியின் போது ‘கணித உதவியாளன்’ என்ற இவரது படைப்புக்கு சர்வதேச வெண்கல விருதும், உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வ கண்டுபிடிப்புக்குரிய சிறப்பு விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,சாதனை மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு மாணவனாக கல்வி பயின்று வருகிறார். அத்துடன் இவர் அன்பே சிவம் அமைப்பின் தொண்டனாகவும் உள்ளார்.

இவர் தாய்லாந்தில் தமிழர்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேட்டி கட்டிப் பதக்கங்களைப் பெற்று அனைத்துத் தமிழ் உறவுகளையும் பெருமை கொள்ள வைத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:-பானு-)