யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி மேற்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்புப் பார்வை
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மேலைக் கோபுரம் என அழைக்கப்படுகின்ற மேற்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(30-01-2019) மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரதான கும்பம் உட்பட ஏனைய கும்பங்கள் சிவாச்சாரியார்களால் முன்னே எடுத்து வரப்பட துர்க்கை அம்பாள் அலங்கார நாயகியாக உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளி வலம் வந்தாள்.
மேற்கு வாசல் கோபுரத்தடியைச் சென்றடைந்ததும் தசம திதியும், அனுச நட்சத்திரமும்,அமிர்த சித்த யோகமும் கூடிய சுபநேரமான காலை-09.50 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம்,மங்கள வாத்தியங்கள் என்பன முழங்க மேற்குவாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து மேற்கு வாசலை அண்மித்துக் குடியிருக்கும் அடியவர்கள் தேவஸ்தானத்திற்கு வருகை தர வசதியாக புதிய பாதையும் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய இராஜகோபுரத் திருக் கதவு சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு அதன் வாசல் வழியாக அம்பாள் தேவஸ்தானத்துக்குள் மீண்டும் எழுந்தருளினாள்.
மேற்படி விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனுடன் நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரியசுவாமிகள், அமெரிக்கா ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள்,கந்தர்மடம் வேதாந்தமட குரு பீடாதிபதி ஆகியோருடன் அமைச்சர் மனோ கணேசன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய அரசியல் பிரபலங்களும் அம்பாளின் கோபுர கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதுமாத்திரமன்றி யாழ்.குடாநாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்காவது கோபுரமான மேற்கு வாசல் கோபுரத்தின் குடமுழுக்கு காணும் துர்க்காதேவியின் பேரழகைக் காண ஆசார சீலர்களாக தேவஸ்தான வளாகத்தில் திரண்டிருந்தனர்.
வெள்ளைக்காரர்கள் சிலரும் ஆர்வத்துடன் அம்பாளைத் தரிசனம் செய்தமை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.