சிறுமி மீது பாலியல் பலாத்காரம், பிணை வழங்க மறுத்த நீதிபதி, மோசமான குற்றத்தை செய்தவருக்கு பிணை வழங்க முடியாதெனவும் கூறினாா்..
“பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் சுட்டிக்காட்டினார்.
கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்திய சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து விளக்கமறியல் உத்தரவு வழங்கிய போதே நீதிவான் இதனைச் சுட்டிக்காட்டினார்.
கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கினார். அதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர். எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டனர். அதனை அடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார். “சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார்.
அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி மன்றுரைத்தார். சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம்.
அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம். அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.