தினமும் போதைப் பொருளுக்கெதிரான நாட்களாக அமுல்படுத்த வேண்டிய நிலையில் யாழ்ப்பாணம்!
வாரம் முழுவதும் போதைப் பொருளுக்கெதிரான வாரமாக ஜனாதிபதி செயலகத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாரம் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் போதைப் பொருளுக்கெதிரான நாட்களாக அமுல்படுத்த வேண்டிய நிலையில் தற்போதைய யாழ்ப்பாணத்தைக் கருத வேண்டியுள்ளது என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார் கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபை, நல்லூர் பிரதேச செயலகம், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கொக்குவில் நாமகள் வித்தியாலயம் ஆகியன இணைந்து முன்னெடுத்த போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், கருத்தரங்கும் கடந்த வியாழக்கிழமை (24) கொக்குவிலில் நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப் பொருள் பாவனை என்பது ஒரு சட்ட விரோதமான செயல். இதனால்,அவர்களது வாழ்வு சிறைக்குள் தள்ளப்பட்டு விடுமென எண்ணுகின்ற அதேவேளை இதனால் ஏற்படக் கூடிய உடலியல் ரீதியான பல்வேறு பாதிப்புக்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டியது அவசியமானது.
தொடர்ச்சியான போதைப் பொருள் பாவனையால் உடலிலுள்ள அனைத்து அங்கங்களும் பாதிக்கப்படும் அபாய நிலையும் காணப்படுகின்றது. 21 வயதுக்குட்பட்டவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவது உசிதமான விடயமல்ல. இந்த வயதுக்குள் போதைக்கு அடிமையாகின்றவர்களின் வாழ்வு முடிந்ததாகவே அர்த்தப்படும்.
போதைப் பொருள் பாவனைக்கு உட்படுகின்றவர்களின் எண்ணம் சிலநாட்களிலேயே அவர்களை அடிமையாக்கி விடும். இதன் காரணமாக அவர்கள் எதனையும் செய்யத் துணிவார்கள். இந்தப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கொலை,கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதுடன் மாத்திரமல்லாமல் இறுதியில் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்.
எதிர்காலத் தலைவர்களான மாணவர்கள் சமூகத்திற்கு உதாரணமானவர்களாகத் திகழ்ந்து வழிநடாத்த இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட வேண்டும். போதைப் பொருட்களுக்கெதிரான மனநிலை எமது சமூகத்தில் மேலும் வளர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.