SuperTopAds

யாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா வெகுவிமரிசை

ஆசிரியர் - Admin
யாழ். ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா வெகுவிமரிசை

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை(19) மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

காலை-09 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் தேர்த் திருவிழா உற்சவக் கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், நாகபூசணி அம்பாள், வள்ளி, தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதியுலா வலம் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து முத்தெய்வங்களும் முத்தேர்களில் எழுந்தருளினர். சிதறு தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முத்தேர் பவனி ஆரம்பமாகியது.

நாகபூசணி அம்பாளின் பிரதான தேர் வடத்தை ஆண் அடியவர்கள் ஒரு புறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் தொட்டிழுத்தனர். அடியவர்களுக்கு அபயமளிப்பதற்காக அழகு நாயகியாக வசந்த நாகபூசணி அம்பாள் திருவீதி வலம் வந்த காட்சி அதி அற்புதமானது.

முத்தேர்களும் திருவீதி வலம் வந்த வேளையில் ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், செதில் காவடிகள், பறவைக் காவடிகள் என்பன எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் என்பன எடுத்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

இந்த வருடம் இவ்வாலயத்தில் புதிய தேரில் வள்ளி, தெய்வயானை சமேத முருகப் பெருமான் வலம் வந்தமை விசேட அம்சமாகும்.

முத்தேர்களும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சுற்றாடலில் அமைந்துள்ள தாக சாந்தி நிலையத்தில் பானங்கள் பரிமாறப்பட்டன. அது மாத்திரமன்றி அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இதேவேளை,இவ்வாலயத் தேர்த்திருவிழா உற்சவத்தில் கிராமத்தைச் சேர்ந்த அடியவர்களுடன் அயற்கிராமங்களான குப்பிழான், குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு உள்ளிட்ட கிராமத்து அடியவர்களும், யாழ். குடாநாட்டின் ஏனைய பல பாகங்களைச் சேர்ந்த அடியவர்களும் எனப் பெருமளவு அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.