மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு- ஊறணியில் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு..
தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு ஊறணியில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்இ மட்டகளப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்
பிரதி முதல்வர் க.சத்தியசீலன்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், பிரதேச, மாநகர சபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் திருவுருவப்படத்திற்கு பிரதம அதிதி மலர் மாலை அணிவித்து ஈகச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
2005ஆம்ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த மூன்று வருடமாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.