SuperTopAds

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 4 பிள்ளைகளுடன் தாய் உண்ணாவிரதம்!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 4 பிள்ளைகளுடன் தாய் உண்ணாவிரதம்!

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, கைது செய்யப்பட்ட தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, கைது செய்யப்பட்டவரின் மனைவி , தனது நான்கு பிள்ளைகளுடன், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது கணவன் கைது செய்யப்பட்டு 18 தினங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது கணவர் எந்தவித குற்றமும் செய்யவில்லை அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

தனது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்த நிலையில், கடந்த 18 தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான துன்பத்தை தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள், அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் சாகும் வரையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அஜந்தன் எனப்படும் சி.ராஜகுமாரனின் மனைவி மற்றும் அவரது குழந்தைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன், அவர்களது நிலைமை குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தொடர்புகொண்டு குறித்த கைது தொடர்பில் விபரங்களை தெரிவித்தார். மேலும் குறித்த கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களைப் பெற்று சட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.