சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் நினைவாக யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று ஜனநாயகம் பற்றிய கருத்தரங்கு

ஆசிரியர் - Admin
சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் நினைவாக யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று ஜனநாயகம் பற்றிய கருத்தரங்கு

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரின் ஞாபகர்த்தமாக “ஜனநாயகம்” என்ற கருப் பொருளிலே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) அன்று சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

“ஜனநாயகம் குறித்து இடம்பெறும் இந்தக் கலந்துரையாடலில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி, அதற்குப் பின்னணியாக இருக்கும் அரசியல், பொருளாதார, அரசியலமைப்பு நிலமைகள், தேசியப் பிரச்சினை, சிறுபான்மையினர் இந்த நாட்டிலே வரலாற்று ரீதியில் எதிர்கொண்டு வரும் சவால்கள், நாட்டில் இனங்களுக்கு இடையில் இருக்கு முரண்பாடுகள், மக்கள் மைய ஐனநாயக செயற்பாட்டிற்கான வழிவகைகளை எவ்வாறு வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் பேசப்படும்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலே பணியாற்றும் செயற்பாட்டாளர்களுடன், மன்னார், அக்கரைப்பற்று, பேராதனை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலே பணிபுரியும் செயற்பாட்டாளர்களும், கல்வியியலாளர்களும் கலந்துகொள்வர்.

இந்நிகழ்வில் அனைவரினையும் கலந்துகொள்ளும்படி அழைக்கின்றோம்” என்று ஏற்பாட்டாளர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.