நாய்களுக்கான சரணாலயம் அமைக்கிறாா் கனடா வாழ் புலம்பெயா் தமிழா்..
வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் “நிவாரணம்” அமைப்பு கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றையும் அமைக்கவுள்ளது.
இது குறித்து “நிவாரணம்” அமைப்பின் நிறுவுனர் எஸ்.செந்தில் குமரன் இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது.
2005ம் ஆண்டு தொடக்கம் எமது அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றோம். ஆரம்பத்தில் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக எமது உதவி திட்டங்களை செய்து வந்த நாம் தற்போது
நேரடியாக வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவி திட்டங்களை செய்து வருகின்றோம். குறிப்பாக எமது அமைப்பின் ஊடாக இதுவரையில் 100ற்கும் மேற்பட்ட வாழ்வாதார உதவிகளை செய்துள்ளோம்.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சங்கமி என்ற பெண்கள் அமைப்பின் ஊடாக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை ஒன்றை 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதேபோல் இதுவரை 50 பேருக்கு அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
உள்ளார்கள். அவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சைக்கு பூரணமான நிதி உதவியை வழங்கியுள்ளோம்;. இதேபோல் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்கும் கூட எமது உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எமது இத்தகைய உதவி திட்டங்களுக்கான நிதியை நானும், கனடா மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளில் வாழும் நண்பர்கள், உதவும் எண்ணம் கொண்ட கொடையாளர்கள் உடாக பெறுகிறோம்.
குறிப்பாக நான் விளம்பரதுறை சார்ந்து பணியாற்றுகிறேன் அதன் ஊடாகவும். தனிப்பட்ட முறையில் நான் ஒரு பாடகர் எனவே இசை நிகழ்ச்சிகளை நடாத்தி அதன் ஊடாகவும் நிதியை சேகரிக்கிறோம்.
எனது நிறுவனத்தின் வரவு, செலவு மற்றும் சகல உதவி திட்டங்களையும் நிறுவனம் சார்ந்தவர்கள் அல்லது நன்கொடையாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்க்கும் வகை யில் சமூக வலைத்தளங்கள் ஊடாக காட்சிப்படுத்தப்படுகின்றது.
மனிதர்களாக பிறந்த நாம் பிற மனிதர்களுக்கு உதவியளிக்கவேண்டும் என்ற அடிப்படையில் இத்தகைய உதவி திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம். இதற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளை அமைத்து
அதனை மக்களிடமே கொடுத்து அவர்களே அதன் ஊடாக நன்மைகளை பெறும் வகையிலான செயற்றிட்டங்கள் தொடர்பான சிந்தனை எங்களிடம் உள்ளது. ஆனால் அது சாதாரணமான விடயமல்ல. மிகுந்த சிக்கலான அல்லது சிரமமான விடயமாக இருக்கிறது.
ஆனாலும் அதனை குறித்து நாங்கள் சிந்திக்கிறோம். அதேபோல் எமது அமைப்பின் இந்த செயற்பாடுகளுக்கு புறம்பாக கிளிநொச்சி பளை பிரதேசத்தில் எமது சொந்த நிதியின் ஊடாக காணி ஒன்றை கொள்வனவு செய்து அதில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றிணை
அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாணங்களில் இன்று கட்டாக்காலி நாய்களினால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொ ள்கிறார்கள், குறிப்பாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன,
உயிரிழப்புக்களும் நடக்கின்றன. எனவே நாய்களை பாதுகாப்பதற்கான சரணாலயம் ஒன்றை அமைப்பது எங்களுடைய நோக்கம். அதேபோல் விலங்கள் மீது சுமத்தப்படும் துன்புறுத்த ல்களுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதற்காக எமக்கு பொதுமக்களிடம் இருக்கும் ஆதரவு மேலும் அதிகரிக்கவேண்டும் என்றார்.