ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா துரோகம் இழைத்துவிட்டாா். மாவை சேனாதிக்கு வந்த காலம் கடந்த ஞானம்..
தோ்தல் காலத்தில் கொண்டிருந்த கொள்கைகளையும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மீறி அல்லது மறுந்து இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றி துரோ கம் இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளாா்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை ஊடகங்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
நாட்டில் ஒரு மோசமான ஆட்சி நடைபெறுவதால் அதனை மாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்பட்டார். இவ்வாறு தேர்தலில் பொது வேட்பாளராக வந்த போதும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வழங்கிய வாக்குறுதிகளையும் மறந்து
அல்லது அதனை மறுதலிக்கின்ற வகையிலையே அவருடைய தற்போதைய செயற்பாடு அமையப் பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கடந்த மாத இறுதியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி புதிய பிரதமராக மகிந்த ராஐபக்சவை நியமித்திருக்கின்றார்.
ஐனாதிபதியின் இச் செயற்பாடுகள் அரசியலமைப்பை மிறுகின்ற சட்டத்திற்கு முரணாண செயற்பாடாகவே காணப்படுகின்றது. இது ஐனநாயக விரோத செயற்பாடு என்பதனாலேயே; ஐனாதிபதியின் செயற்பாட்டை தற்போது பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இதே வேளை கடந்த ஆட்சிக் காலத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகவே மைத்திரிபால சிறிசேனவிற்கு நம்பிக்கையுடன் வாக்கிளித்திருந்தனர். ஆனால் எங்களது மக்களின் ஆதரவைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன
இன்றைக்கு மீளவும் மகிந்த ராஐபக்சவை நியமித்திருப்பது தான் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. நாம் பல்வேறு எதிர்பார்ப்புடன் ஆதரவு தெரிவித்து எமது மக்கள் வாக்களித்துக் கொண்டுவந்த மைத்திரிபால சிறிசேனவின் இத்தகைய செயற்பாடுகள் துக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
அதுவும் சட்டத்திற்கு முரணாக ஐனநாயக மரபுரிமையை மீறுகின்ற செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருக்கின்றார். ஆகவே தான் எங்களது ஐனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கின்றோம்.
அத் தீர்மானம் என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவானதோ அல்லது மகிந்த ராஐபக்சவிற்கு எதிராதோ அல்ல. நாங்கள் யாரையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அரசியலமைப்பை மீறி ஐனாநாயகத்திற்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற செயற்பாட்டையே எதிர்க்கின்றோம்.
மேலும் குறிப்பாக ஒரு நாட்டில் ஐனாதிபதி அல்லது பிரதமர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டால் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பார்கள். ஆனால் இங்கு அவ்வாறு ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதும் அத்தகைய வாழ்த்துக்களை யாரும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இன்றைக்கு உலகத்திலுள்ள பல நாடுகளும் இந்த நியமனத்தை எதிர்த்து தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆகவே இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணாக ஐனநாயகம் மீறப்பட்டுள்ளதென்பதை
சகல தரப்பினர்களுமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாக மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.