SuperTopAds

த.தே.கூட்டமைப்பு ரணிலிடம் விதித்த நிபந்தனை என்ன? கண்ணை மூடி கொண்டு ஆதரித்தீர்களா?

ஆசிரியர் - Editor I
த.தே.கூட்டமைப்பு ரணிலிடம் விதித்த நிபந்தனை என்ன? கண்ணை மூடி கொண்டு ஆதரித்தீர்களா?

இந்தியாவைக் கேட்டுத் தான் முடிவெடுப்போம் என்று மாவைசேனாதிராசா அறிவித்திருக்கின்ற சூழலிலே இந்திய அரசாங்கம் இலங்கையிடம் இருந்து சில நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலிலே 

அந்த முயற்சிகளுக்கு மைத்திரிபால சிறிசேன இடஞ்சலாக இருந்து வந்திருக்கின்ற சூழலிலே இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்து திடீரென ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றது என்று சொன்னால் 

என்ன உத்தரவாதங்களை ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று  மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது

கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி குழப்பங்களுக்கு மத்தியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்தது. இந்த இடத்திலேயே கூட்டமைப்பினருடைய 

தலைமைப்பீடத்தில் இருந்து ஏற்கனவே கூறப்பட்டிருந்த விடயம் தாங்கள் யார் என்ற நபரைப் பார்க்கவில்லை தாங்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகளுக்கு இணங்குகின்றவர்களுக்கு தாங்கள் ஆதரிப்போம் என்ற அடிப்படையிலே அவர்களுடைய கருத்துகள் அமைந்திருந்தது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ரணிலை ஆதரிப்பதாக முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் 

அது தமிழ் மக்களுடைய நலன் அடிப்படையிலானதா அல்லது அவர்களுக்கு பின்னால் உள்ள வல்லசக்திகளுடைய நலன் அடிப்படையிலானதா என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது. 

இதுவரைக்கும் மைத்திரிபால ரணில் விக்கிரமசிங்க எந்த உத்தரவாதங்களையும் நிறைவேற்றியிருக்காத சூழலிலே அல்லது எந்த நன்மைகளையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்காத சூழ்நிலையில் அவர்கள் 

ஆதரிக்கின்றார்கள் என்று சொன்னால் அதற்கு ஒரேயொரு காரணம் இந்திய மற்றும் மேற்குலகநாடுகளின் நலன்களுக்காக தமிழ் மக்களுடைய நலன்களை பலியிட்டு அடகுவைத்து 

அவர்கள் இம்முறையும் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க முற்படுகிறார்கள் என்பது தான் உண்மையான விடயம்.

உண்மையிலே 2015 ஆம் ஆண்டு இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தி பதவிக்கு வந்த பிற்பாடு ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பாதுகாப்பு சபைக்கு இந்த விடயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போர்க் 

குற்றவிடயங்கள் மீது சரியான நடவடிக்கைகளை இறுக்கியிருந்தால் இன்று மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் அவர்களுடைய கும்பலும் தூக்குமேடைக்கு ஏற்றப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமையை நாங்கள் ஏற்படுத்தியிருக்க முடியும். 

எதனையும் செய்யாது அவர்களை பாதுகாத்துக் கொண்டு அந்த பாதுகாப்பு மீட்பு வந்து ரணிலும் மைத்திரியும் தான் செய்தார்கள் என்று சிங்கள மக்களுக்கு காட்டி சிங்கள மக்கள் மத்தியில் 

இவர்களுக்குரிய செல்வாக்கை வளர்க்க முற்பட்டார்கள். ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகப் போயிருக்கிறது. 

இந்த இடத்தில் மீண்டும் ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடைய நலன்களை மீண்டும் பலியிட்டு இந்திய மேற்குலக நாடுகளின் நலன்களுக்கு மட்டுமேயன்றி வேறெதுவுமில்லை.