SuperTopAds

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பலத்தை பயன்படுத்தாமைக்கு காரணம் என்ன?

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பலத்தை பயன்படுத்தாமைக்கு காரணம் என்ன?

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தன்னிடம் உள்ள அரசியல் பல த்தை காண்பித்திருந்தால் அரசியல் கைதிகள் விடுதலை சாத்தியமாகியிருக்கும். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதனை சிந்திக்கவே தயாராக இல்லை. 

மேற்கண்டவாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசி தீர்க்கவேண்டிய காலம் இந்த அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னரான 6 மாதங்கள் அல்லது 1 வருடங்களாகும். 

அதற்குள் பேச வேண்டியதை பேசி, செய்யவேண்டியதை  செய்திருக்கவேண்டும். காரணம் அப்போது எதிரணியில் உள்ளவர்கள் முடங்கியிருந்தார்கள். இன்று அவ்வாறான நிலை இல்லை. தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை, 

காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பேசினார்கள். ஆனால் ஒன்றும் பூரணமாக அல்லது திருப்திபடும் வகையில் தீர்க்கப்படவில்லை. 

குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பலத்தை காண்பித்திருக்கவேண்டும். அவர்களுக்கு அந்த அரசியல் பலம் இருந்தது. ஆனாலும் அவர்கள் அதனை பயன்படுத்தவில்லை. 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளை பேசி அதனடிப்படையில் அனைவரும் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவேண்டும். 

அரசியல் கைதிகளுக்காக அனுராதபுரம் நோக்கி நடந்து சென்ற மாணவர்களும் கூட சொல்லியு ள்ளார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நாங்கள் சிறைச்சாலை வரையில் கொண்டுவந்திருக்கிறோம். 

அதற்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் இந்த விடயத்தினை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளார். ஆகவே சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்க த்துடன் பேசுவதன் ஊடாக சிறந்த பயனை பெறலாம். 

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தங்கள் கட்சிக்குள்ளேயே இதுபற்றி பேசுவதாக தெரியவில்லை என்றார்.