SuperTopAds

உறுதி மொழிகளை தொடர்ந்து அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது..

ஆசிரியர் - Editor I

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை இன்றைய தினம் சனிக்கிழமை சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அதன் போது அவர்கள் காலையில் தம்மை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவமோகன் ஆகியோர் சந்தித்தனர். 

அதன் போது நாம் அவர்களிடம் எம்மை தரம் பிரிக்காது விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிடின் சிறிது கால புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தோம். அதனை அடுத்து தாம் ஜனாதிபதியுடன் மீண்டுமொரு சந்திப்பை மேற்கொள்ள உள்ளோம். 

அதன்போது உங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றோம். அதன்போது எமக்கு  சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லை எனில் உங்கள் விடுதலைக்காக தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம். அத்துடன் பாதீட்டையும் எதிர்ப்போம் என உறுதி தந்துள்ளார்கள் என எம்மிடம் போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகள். தெரிவித்தனர்.

அதனை அடுத்து நாமும் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் நாம் உங்களுக்காக போராடுகிறோம் என உறுதி அளித்தோம் .

அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு , தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதி மொழியையும் நம்பி எமது போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துகின்றோம்.

அதேவேளை எமது விடுதலை தொடர்பில் சாத்தியமான முடிவெடுக்க வேண்டும். விடுதலையை சாத்தியமாக்காவிடின் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்போம். என போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாக அருட்தந்தை தெரிவித்தார்.