அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒப்படைப்பு..
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இலங்கை அரசாங்கத்தின் 2019ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் ஆதரவளிக்ககூடாது.
மேற்படி கோரிக்கையினை தமிழ் அரசியல்வாதிகள் சகலரிடமும் விடுப்பதென அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வடமா காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்றைய கலந்துரையாடலின்போது 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், அவர்களுடைய உடல்நிலை தொடர்பாகவும் பேசியுள்ளோம்.
இதனடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதற்கும், அவர்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருக்கிறோம். இதனடிப்படையில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
குறிப்பாக இன்று சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு ஆணை வழங்கியவர்கள் உதாரணமாக கருணா போன்றவர்கள் வெளியே சுகபோகம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஆணையை ஏற்று நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு மட்டும்
தண்டணை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும். மேலும் இலங்கை அரசாங்கத்தின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பாதீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமாக இருந்தால்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். இல்லையேல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான நிபந்தனைகளை விதிக்கவேண்டும். இதனை பாதீடு சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்கும்,
அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல் வாதிகளுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் கூறவேண்டும். என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினையை சிவில் சமூக அமைப்புக்கள்
கையில் எடுத்திருக்கும் நிலையில் அதனை ஆக்கபூர்வமாக கொண்டு சென்று விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கவேண்டியுள்ளதால் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரவேண்டும்.
என கேட்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அருட்திரு எம்.சக்திவேல் தலமை யில் 5 பேர் கொண்ட குழு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென் று அரசியல் கைதிகளிடம் கோரிக்கை விடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்றார்.