வெடுக்குநாறி மலையில் ஏணியை பொருத்த பொலிஸாா் தொடா்ந்தும் தடை..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலையில் ஏணியை பொருத்த பொலிஸாா் தொடா்ந்தும் தடை..

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய ஏணியை மாற்ற பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் அப்பகுதிக்கு எவரும் செல்ல கூடாது எனவும் நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்தனர்.

அதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததை அடுத்து , ஆலயத்திற்கு சென்று வருவதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் தடையில்லை எனவும் ஆலயத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க கூடாது என பொலிஸார் உத்தரவிட்டனர்.

அந்நிலையில் குறித்த ஆலயத்திற்கு அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் தற்போது சென்று வருவதனால் இது வரை காலமும் இருந்த ஏணி பழுதடைந்து அறுந்து விழும் நிலையில் காணப்படுவதனால் புதிய ஏணியை பொறுத்த ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதனை அடுத்து ஆலய நிர்வாகத்தை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து புதிய ஏணியினை தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்து மூல அனுமதி கிடைக்காமல் பொறுத்த வேண்டாம் என தடைவிதித்துள்ளனர்.

அதன் போது நிறுவாகத்தினர் இருந்த ஏணி அறுந்து விழும் ஆபத்து உள்ளது. அதனால் இருந்த ஏணியை கழட்டி விட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் புதிய ஏணியை பொருத்தவுள்ளோம் என கூறிய போதும் பொலிஸார் அதனை கவனத்தில் எடுக்காது தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டினார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு