திருட்டு சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக பெருங்குற்ற பிாிவு பொலிஸாா் 17 பேருக்கு உடன் இடமாற்றம்..
யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
தனது முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கடை உரிமையாளர் கொண்டு சென்றார்.
அதனை அடுத்து யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் குழுவொன்றினை அமைத்து , விசாரணைகளை முன்னெடுக்க வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்தார்.
அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கடை உரிமையாளரின் முறைப்பாட்டை அடுத்து அப்போது கடமையில் இருந்த சார்ஜண்ட் தர உத்தியோகஸ்தர் பதிவேட்டு புத்தகத்தில் வெளிச்செல்லும் பதிவு எதனையும் மேற்கொள்ளாது ,
சம்பவ இடத்திற்கு சென்றதுடன் , சம்பவ இடத்தில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தனது குறிப்பேட்டில் பதிந்த போதும் அதனை பின்னர் குற்றப்பதிவு புத்தகத்தில் அன்றைய தினமே ஒட்டாது.
மறுநாளே ஒட்டியுள்ளார். போன்ற விடயங்களை விசாரணைக்குழு கண்டறிந்து , வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் பிரகாரம் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய அத்தனை உத்தியோகஸ்தர்களுக்கும் இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றதா ? என விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.