வயிற்று பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றிலேயே அடிக்கிறது வனவள திணைக்களம்..
முல்லைத்தீவு- செம்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான 100 ஏக்கர் விவசாய நிலம் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு ஒன்றை சமர்பித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 133வது அமர்விலேயே ரவிகரன் மேற்படி விசேட கவனயீர்ப்பை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வனலாகா தாம் நினைத்தபடி எதுவும் செய்யலாம்.
அதாவது காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கொண்டுவந்து காடுகளை அழித்து குடியேற்றலாம். அவர்களுக்கு காணிகளையும் வழங்கலாம். ஆனால் உண்மையான இக் காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான
தமிழர் காணிகளை மட்டும் பறிக்கலாம். அல்லது தடுக்கலாம். இதுதான் வனலாகாவின் செயலாக முல்லைத்தீவில் காணக்கூடியதாக உள்ளது. அத்துமீறி வந்தவர்களுக்கு இது வந்த நிலம், எமது மக்களுக்கு இது சொந்த நிலம்.
2010ம் ஆண்டுக்கு பின்னர் 15356 ஏக்கர் காணிகளுக்கு தாங்கள் எல்லைகள் இட்டுள்ளதாக வனலாகா அதிகாரிகள் 2016ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறியுள்ளார்கள். இந்த ஏக்கர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
4035 குடும்பங்களின் வாழ்வாதார 13232 ஏக்கர் நிலங்களும் இதற்குள் உள்ளடங்கும் செம்மலை மக்களின் வயிற்று பசியை போக்கும் வாழ்வாதாரத்திற்குரிய நிலங்கள் புளியமுனை பகுதியில் உள்ளது. 1972ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து உப உணவு பயிர்ச்செய்யை
இந்த காணிகளிலேயே செய்து வந்தார்கள். போர் நடைபெற்ற 1983ம் அண்டு காலப்பகுதியில் இ ருந்து இங்கு பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலை காணப்பட்டது. கிட்டத்தட்ட 35 வருடங்களின் பின்னர் தற்போது இங்கு பயிர்ச்செய்கை செய்து வருகின்றார்கள்.
கடந்த மாதம் அப் பகுதிக்கு சென்ற வனலாகாவினர் முன்பு எல்லைகள் இட்டிராத இந்த இடங்களில் ஆங்காங்கே ஒழுங்கினமற்ற முறையில் எவ் என்ற அடையாளங்களை இட்டு இந்த இடங்களுக்குள் நுழைய கூடாது.
மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள். இவ் அறிவித்தல் களினால் வயிற்று பசிக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொண்டிருந்த 40 குடும் பங்களின் 100 ஏக்கர் வரையிலான காணிகளில் தொழில் செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றார்கள்.
இன்னும் இரண்டு வார காலத்திற்குள் கச்சான், சோளன் ஆகியன பயிரிடவேண்டிய நிலையில் இத்தடுப்பானது இந்த மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இக்குறைபாடுகளை நேரில் வந்து பார்வையிடும்படி என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக கடந்த 201 8.10.01ம் திகதி
அங்கு சென்று மக்களுடன் குறித்த இடங்களை பார்வையிட்டேன். இக்கா ணிகள் சிலவற்றுக்கு ஆவணங்கள் உள்ளன. ஒவ்வொரு காணிகளிலும் ஒன்று அல்லது இர ண்டு மரங்கள் உள்ளன. இவை ஏற்றுக்காவல் மற்றும் நிழலுக்காக முன்பு தொடக்கம் இருந்தவை எனவும்
தெரிவித்தார்கள். கடந்த 3 வருடங்களாக தாம் உப உணவு பயிர்ச்செய்கை செய்து வரும் நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று சிபார்சின் அடிப்படையில் விவசாய கிணறுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை பார்வையிட்டு பிரதேச செயலருக்கும் தெரியப்படுத்தினேன். தான் இந்தியா செல்வத hகவும், வந்ததும் இது விடயங்களை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்த அவை கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மக்களுடைய வாழ்வில் வயிற்று பசியில் கைவைக்காது அவர்களுடைய சொந்த நிலங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதனடிப்படையில் இந்த விடயம் வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட வுள்ளது.