சிவன் சிலை அமைக்க அனுமதி மறுத்த காரைநகர் பிரதேச சபை நட்சத்திர விடுதி அமைக்க அனுமதி..
காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
காரை. புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவுக் கூட்டங்களுக்குள் சிறப்புவாய்ந்த காரைநகர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற ஈழத்துச் சிதம்பரம் என்ற சிவன் ஆலயத்துடன் ஏராளமான ஆலயங்களால் நிறைந்துள்ள பக்தித் தீவாக இது விளங்குகின்றது. காரைநகர் மக்கள் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்தவர்கள், வளர்ப்பவர்கள்.
இந்நிலையில் காரைநகர் நுழைவாயிலில், நூற்றாண்டு பெருமை வாய்ந்த காரைநகர் சைவ மகா சபையால் சிவபெருமானின் பாரிய சிலை ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று (30) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அங்கு சென்ற காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன், வேலைகளை நிறுத்துமாறும் இல்லையேல் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவித்தார் என அங்கு நின்ற சைவ மகா சபையின் உறுப்பினர் தெரிவித்தார்.
வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸாரை வரவழைத்து அவர்கள் மூலம் இந்த வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.
இந்நிலையில், காரைநகர் நுழைவாயிலில், குறித்த சிவன் ஆலயம் அமையவுள்ள காணிக்கு எதிர்த் திசையில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு பிரதேச சபை தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரியவருகின்றது. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அனுமதி இன்றி இந்த விடுதி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆன்மிகப் பெருமை பேசும் காரைநகர் மண்ணில், ஐந்து நட்டத்திர விடுதி அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள பிரதேச சபை, சிவன் சிலை அமைப்பதற்கான பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளமை தொடர்பாக காரைநகர் மக்களில் பலர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சிவன் சிலை அமைப்பதை தடுத்தி நிறுத்திமைக்கு எதிராக காரைநகரைச் சேர்ந்த பலர் தமது முகப்புத்தங்களிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.