சீ.வி.விக்னேஸ்வரன் வெற்றி பெற்றுவிட்டார். உண்மையை உடைத்த எம்.ஏ.சுமந்திரன்..
வடமாகாணத்தில் மிகவும் நெருக்கடியான மகிந்தராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலும் பின்னரும் வடக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மிக தெளிவாக சர்வதேசத்திற்கு கூறுவதில் வடமாகாண முதலமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் குறித்து இன்று யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரு டைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை உரத்து சொல்வதில் விக்கிணேஸ்வரன் வெற்றிகண்டுள்ளார். குறிப்பாக மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பயங்கரமான ஒடுக்கு முறைக்குள் நாம் சென்றிருந்த போது விக்கிணேஸ்வரன் கொண்டிருந்த ஆளுமையும் அவர் குறித்தான சர்வதேசத்திற்கு இருந்த எண்ணத்தையும் உபயோகித்து இவற்றை உரத்து கூறியிருந்தார்.
ஆனால் மாகாண சபையின் போதாத அதிகாரங்களை கூட சரியாக உபயோகித்து போரினால் எமது பிரதேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்ற மக்கள் கொடுத்த ஆணையை முதலமைச்சர் தலமையிலான வடக்கு மாகாண சபை அதனை எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை என்றார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக..
புதிய அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். வழிநடத்தல் குழு எதிர்வரும் 11ம் திகதி கூடுகிறது. அப்போது மொழி பெயர்ப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து உறுதிப்படுத்தப்படும்.
பின்னர் எதிர்வரும் அக்டோபர் மாதம் 25ம் திகதி நிபுணர்களால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு நகல் அரசியலமைப்பு பேரவையிடம் சமர்பிக்கப்படும். அது முன்னேற்றகரமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். பின்னர் அது அரசியலமைப்பு பேரவையிலேயே பகிரங்கப்படுத்தப்படும்.
அது மாத்திரமல்லாம்மல் நாடு முழுவதும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு ஏற்படுத்தப்படுவதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தின் காலம் போதாமல் உள்ளது என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் அதனை நிறைவேற்ற முடியுமா என்ற எண்ணம் உள்ளது.
இதேவேளை காலம் போதுமாக உள்ளது என்பது என்பது எமது கணிப்பாகும். ஆனால் இதனை நிறைவேற்ற ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் தலமைத்துவம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும். இது அவர்கள் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொடுத்த உறுதி மொழி என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம் என்றார்.
மகாவலி எல் வலய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக..
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியே ற்றங்கள் குறித்து வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் ஆதாரங்களுடன் பேசுவோம்.
எதிர் வரும் 03ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது ஜனாதிபதி தலமையில் இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாகவும் பேசவுள்ளோம். இதேவேளை இங்கு மற்றுமொரு முக்கிய விடயம் தொடர்பாகவும் பேசவுள்ளோம்.
அதாவது முல்லைதீவு மாவடத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம்.
முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்து தொடர்பாக..
2009ம் ஆண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற பல விடயங்கள் தொடர்பான உண்மைகள் தனக்கே தெரியும் என கூறியிருக்கும் ஜனாதிபதியிடமே உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறையூடான முதலாவது விசாரணை நடாத்தப்படவேண்டும்.
அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமாமாக கணித்து பொது மன்னிப்பு வழங்குகின்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அதனை கூட்டமைப்பு நிராகரிக்கும். அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என நான் கூறிவந்தது இதற்காகவே. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசியல் தலமைகளும் சில ஊடகங்களும் பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
பொது மன்னிப்பு என்பது விசாரணை இன்றி அனைவரையும் விடுவிப்பது. ஆனால் நாம் அதனை கோரவில்லை. நாம் கேட்டதுஇ நீண்ட கால அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பதையேயாகும்.
இங்கே பொறுப்புக்கூறல் என்பதும்இ உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியமானது. அவ்வாறு உண்மை கண்டறியப்பட்ட பின்னர் இருதரப்பினருக்கும் மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேச முடியும்.
மாறாக உண்மை கண்டறியப்படாமல் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கின்ற நிலையிலும் மறு பக்கத்தில் யார் எவர் என்று தெரியாமல் என்ன குற்றமிழைத்தார்கள் என்று தெளிவுபடுத்தப்படாமலும் அவர்களுக்கு மன்னிப்பு என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயமானது ?.
அத்துடன் இச் செயற்பாடு சர்வதேச சட்ட நியமங்களுக்கும் சர்வதேச நாடுகளுடைய எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையும். இவ்வாறான ஒர் திட்டத்தை ஜ.நாவில் ஜனாதிபதி முன்வைக்க போவதாக கூறப்பட்ட நிலையிலேயே இது தொடர்பாக ஜ.நா செயலளாருக்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
அதன் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அத் திட்டத்தை ஜ.நா வில் முன்வைக்கவில்லை போலும். இவ்வாறன நிலையில் இறுதி கட்ட போரில் இடம்பெற்ற உண்மைகள் தமக்கு மாத்திரமே தான் தெரியும் என ஐனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில்
உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற பொறிமுறையில் முதலாவது சாட்சியமாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தில் இரு தரப்புமே சர்வதேச குற்றங்களை இளைத்ததாக இரண்டு சர்வதேச விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனவே இவை தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். நிலைமாறு கால நீதியின் முக்கிய தூணாக இருப்பது உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதாகும்.
அதனை செய்யாமல் வெறுமனே ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்கும் திட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.