SuperTopAds

2004ம் ஆண்டு இடம்பெற்ற குழந்தை கடத்தல் வழக்கு விரிவான அறிக்கை சமர்விக்க உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
2004ம் ஆண்டு இடம்பெற்ற குழந்தை கடத்தல் வழக்கு விரிவான அறிக்கை சமர்விக்க உத்தரவாதம்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கின் விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்பட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விரைவில் முழுமையான விசாரணை அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அறிவித்தனர்

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில் வல்வெட்டித்துறை கரணவாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்துக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் மகப்பேற்று நிபுணர்களின் உதவியுடன் தன்னுடைய ஒரு குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் இடம்பெற்று தற்போது யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குப் பாரப்படுத்துமாறும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு மேற்கண்டவாறு அறிவித்தனர்.