தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர்களை நினைவுகூரலாமா? நாசுக்காக நழுவிய ஜனாதிபதி சட்டத்தரணி..
தியாக தீபம் திலீபனின் நினைவு கூறலை தடை செய்ய கோரிய வழக்கில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட சட்டத்தரணிகள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வி மிக கவனமாக தவிர்த்து உள்ளனர் எனவும் ,
அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது. இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என சட்டத்தரணி கு.குருபரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடை செய்ய கோரி நடைபெற்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் தனது முகநூலில் மேற்கொண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
திலீபன் அண்ணாவின் நினைவிடம் தொடர்பிலான விண்ணப்பம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி தான். ஆனால் இத்தீர்ப்பு பெற முன்வைக்கப்பட்ட வாதங்கள், வழக்கு எப்படி நீதிமன்றிற்கு வந்தது என்பதற்கு பின் உள்ள நுட்பமான அரசியல் அபத்தமானவை.
(வழக்கு வந்தது எப்படி என்பது தொடர்பிலான ஊகங்களை தவிர்க்கிறேன். மன்றின் முன் வந்த வாதங்கள் பற்றி கூறுகிறேன்). தியாகி திலீபன் அண்ணாவின் நினைவுத் தூபிக்கு வேலி அமைத்தது ஸ்ரீலங்கா அரசின் பணத்தில் தான் என்றும் (சிறீதரன் MP யின் திரட்டு நிதி ஒதுக்கீடு) தனது திரட்டு நிதிய (consolidated fund) ஒதுக்கீட்டில்
தூபி கட்ட (மீளமைக்க என்று தானும் சொல்லவில்லை) நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே திலீபன் அண்ணாவின் தூபி இலங்கை அரசாங்கத்தின் பணிப்பின் பிரகாரமே கட்டப்படுகின்றது (அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்) என்ற வாதத்தை சுமந்திரன் சேர் முன்வைத்தார்.
மாநகர சபையின் தீர்மானத்தின் பெயரில் நிகழ்வுகள் நடப்பதாகவும் வாதிடப்பட்டது. இது இந்நிகழ்வுகள் சட்ட பூர்வமானாவை என்பதை காட்டுவதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
மேயர் ஆனோல்டின் (நாம் தான் செய்வோம் வேறு யாரும் செய்ய முடியாது) அறிவிப்பில் இருந்து இன்று மன்றில் இடம்பெற்ற வாதங்கள் வரை திலீபன் அண்ணாவின் நினைவிடத்தையும் அங்கு அஞ்சலி நிகழ்வு நட்த்துவதையும் மாநகர சபையின் ஏக போக உரிமைக்குள் (monopolising memory) கொண்டு வந்து நினைவுகூரலை பொதுப் பரப்பில் இருந்து குறுக்கும் செயற்பாட்டின் உச்சம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இது கூட்டமைப்பு செய்தாலும் பிழை தான் முன்னணி செய்தாலும் பிழை தான் முதலமைச்சர் செய்தாலும் பிழை தான். அரச அதிகாரம் நினைவு கூறலை ஒழுங்குபடுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது. அரச அதிகாரம் நினைவு செயற்பாடுகளை வசதிப்படுத்தலாம் (facilitate) ஆனால் உடைமை கொள்ள.முடியாது.
இன்று மன்றில் மாநகர சபையின் சட்டத்தரணிகள் கவனமாக தவிர்த்த விடயம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவு கூறலாமா என்பது தொடர்பிலான கேள்வியை. எம்மையும் தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கினர். இதை நீதிமன்றில் பிரச்சனையாக்குவது முக்கியமானது. அதற்கான வாய்ப்பு இன்று இழக்கப்பட்டுள்ளது.
இதை வாதாடி நீதிமன்றம் அங்கீகரிக்குமா என்பது இங்கு முக்கியமல்ல. ஏன் நாம் இந்த கேள்வியை கேட்பதில்லை என்பதே முக்கியமானது.
இன்று நாம் மன்றில் தோன்றி அக்கறையுள்ள தரப்பு என்ற வகையில் எமது தரப்பை கேட்க வேண்டும் என வாதாடினோம். இது மாநகர சபையின் காணிப் பிரச்சனை அல்ல என்று நிலைப்பாடு எடுத்தோம். பொது மக்களின் நினைவு கூறும் உரிமையை பற்றியது அதையும் கேளுங்கள் என்று சொல்லி பார்த்தோம்.
மன்று ஏற்கவில்லை. இப்படியான வழக்குகளில் யார் தோன்றலாம் (local standi) என்பது விசாலமாக பார்க்கப்படுவது வழமை. ஆனால் எனது காணியில் அமைக்கப்பட்ட கட்டடம் சட்ட பூர்வமாக கட்டப்பட்டதா என்ற தோரணையில் வழக்கு முடிவடைந்திருக்கிறது. என குறிப்பிடப்பட்டு உள்ளது.