SuperTopAds

இடமாற்றம் வழங்காமையால் தற்கொலை செய்த அரச ஊழியர், விசாரணை நடத்துமாறு கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
இடமாற்றம் வழங்காமையால் தற்கொலை செய்த அரச ஊழியர், விசாரணை நடத்துமாறு கோரிக்கை..

அபிவிருத்தி உத்தியோகத்தர் தில்லையம்பலம் கஜேந்திரகுமாரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று வடமாகாண உத்தியோகத்தர் சங்கம் இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது

முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகப் பிரிவின் கீழ் உள்ள மாந்தை கிழக்கு (பாண்டியன்குளம்) பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சக உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான தேவையற்ற குழப்பங்களை நீக்கும் இடத்து துரித விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். 

நாம் இழந்திருப்பது சிறந்ததோர் அலுவலராகவும் மக்கள் சேவகனாகவும் செயற்பட்ட ஒருவரை. தன்னைப்பற்றி சிந்திக்காமல் பிறருக்காக வாழ்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது மிகப்பெரிய கேள்வியே. யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நஞ்சருந்தியது எதற்காக?

தன்னுடன் கடமையாற்றும் ஏனைய அலுவலர்களின் இடமாற்றத்துக்காக கொழும்பு வரை சென்று வந்தவர். இப்படியொரு முடிவெடுக்க ஏதுவாக அமைந்த காரணங்கள் எவை? 

அவரின் இந்த முடிவின் நோக்கம் அவரது தனிப்பட்ட விடயமாகவோ அல்லது பொது விடயமாகவோ கடந்து செல்ல முடியாது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்கா விடின் மீளவும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை உரிய உயரதிகாரிகள் உணர்ந்து கொண்டு 

விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துகின்றோம்.  வடமாகாணத்தைப் பொறுத்த வரை சொந்த மாவட்டத்தைவிட்டு வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அனைத்து வகையான அரச உத்தியோகத்தர்களும் ஏதோவொரு உளத்தாக்கத்துடனேயே சேவையாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனம் என்றுள்ளது.