SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலுக்கு நிரந்தர தடை..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலுக்கு நிரந்தர தடை..

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட சுருக்குவலை தொழிலுக்கான சகல அனுமதிகளையும் உடனடியாக தடைசெய்யுமாறு   மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப்  பணிப்பாளரிற்கு பணிப்பாளர் நாயகம் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சுருக்குவலைத் தொழிலை நிறுத்துமாறு மாவட்டத்தின் அதிக மீனவர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைச்சரின் பணிப்பின் பெயரில் சுருக்குவலை தடை செய்யப்பட்டது. 

இவ்வாறு தடை செய்யப்பட்டதனையடுத்து சுருக்குவலைத் தொழில் புரிந்த குறிப்பிட்டளவு மீனவர்கள் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த மாதம் 17ம் திகதி 14  மீனவர்களிற்கு சுருக்குவலை அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு 17ம் திகதி மீண்டும் 14 மீனவர்களிற்கு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் அனுமதி வழங்கிய விடயம் தொடர்மில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராயா மற்றும் இ. சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் கவனத்திற்கு 

மாவட்ட மீனவ அமைப்புக்கள் கொண்டு சென்றதனையடுத்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் மாவட்ட மீனவ அமைப்புக்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.

இதன் பிரகாரம்    முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் பேதுருப்பிள்ளை - பேரின்பநாதன் உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் ,   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் 

மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் மீன்பிடி அமைச்சரை நேரில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது    மாவட்டத்தில் வழங்கியுள்ள சுருக்குவலை அனுமதிகள் அனைத்தையும் உடனடியாக  இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டதோடு 

மாவட்டத்தில் மீனவ சங்கங்களுடன் முரண்பாடாக உள்ள உத்தியோகத்தர் மூவரையும் உடனடியாக மாவட்டத்தை விட்டு இடமாற்றம் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலை மாவட்ட பிரதிப் பணப்பாளர்களிற்கான கலந்துரையாடல் கடந்த 21ம் திகதி கொழும்பில் அமைச்சில் இடம்பெற்றது. 

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட சுருக்குவலைக்கான அனுமதிகள் அனைத்தையும் இரத்து செய்யுமாறு எழுத்தில் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.