இலங்கை ஒரு பௌத்த நாடு என தமிழ்தேசிய கூட்டமைப்பே இந்தியாவிடம் கூறுகிறது..

ஆசிரியர் - Editor
இலங்கை ஒரு பௌத்த நாடு என தமிழ்தேசிய கூட்டமைப்பே இந்தியாவிடம் கூறுகிறது..

புதிய அரசியலமைப்பு உருவாக்கத் தெரிவுக் குழுவிற்கு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை கொடுக்கின்ற போது இலங்கை  பௌத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்வதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த நிலையில் அதுவே தமது நிலைப்பாடு என்பதனை அக் கட்சியின் தலைவர் இந்தியாவில் வைத்தும் சொல்லியிருக்கின்றார். 

இதனால் அம்பலப்பட்டிருக்கின்ற கூட்டமைப்பின் தமது இந்த நிலைப்பாட்டை மக்கள் முன்பாக வந்தும் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அது தான் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று இந்தியாவில் வைத்து சம்மந்தன் தெரிவித்திருக்கின்ற போதும் அதனை அக் கட்சியினர் யாருமே இதுவரையில் மறுக்கவில்லையே. 

ஏன் என்றால் அது தான் உண்மை. ஆனால் மதச்சார்பற்ற நாடே தங்களது கட்சியின் கொள்கை என்றும் டகள்ஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றக் குழு அண்மையில் இந்தியா விஐயம் செய்த போது எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

அந்தக் குழுவில் சென்ற ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் இது தொடர்பில் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில். 

எமது பயணங்கள் சந்திப்புக்களின் போது நடைபெற்றதை வெளியில் சொல்வது சரியில்லை. ஆனாலும் நான் அதனை ஊடகங்களுக்குச் சொல்லவில்லை என்றாலும் என்னுடைய பெயரால் அந்த விடயங்கள் வெளியில் வந்துவிட்டது. அந்தச் சந்திப்பின் போது சம்மந்தன் அப்படிச் சொன்னதில் எனக்கும் இணக்கப்பாடு இல்லை. 

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு கட்சிகள் தமது நிலைப்பாடுகளை கொடுக்கின்ற போது மதச்சார்பற்ற நாடு என்று ஈபிடிபி தெளிவாகச் சொல்லியிருந்தது. 

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மதச்சார்பற்ற நாடு தான் எங்கள் கொள்கை. ஆனால் பிரதான இரண்டு கட்சிகளும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் சொல்வதை தாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம் என்று தான் கொடுத்திருக்கின்றார்கள். அவ்வாறு கூட்டமைப்பினர் கொடுத்தது என்ன அர்த்தத்தை குறிக்கின்றதோ அதனை இந்தச் சந்திப்பில் அக் கட்சியின் தலைவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். 

அதை கூட்டமைப்பின் நிலைப்பாடு தான். ஆனால் எங்கள் நிலைப்பாடு மதச்சார்பற்ற நாடு என்பது தான். அதனையே தெரிவுக்குழுவிற்கும் கொடுத்திருக்கின்றேன்.

ஆனால் அதனை ஏற்றுக் கொள்கின்றனரோ இல்லையோ எங்கள் கொள்கையையே நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். நாங்கள் தனிநாட்டுக்கு என்று பொராட்டத்தை ஆரம்பித்த போது கூட அவர்கள் ஏற்றுக் கொள்கினமா இல்லையா என்று பார்த்தா வெளிக்கிட்டோம். 

எங்கள் கொள்கை எதுவோ அதற்காகவே வெளிக்கிட்டோம். அது போல மதச்சார்பற்ற நாடென்று தான் நாங்கள் அரசியல் தீர்வுத் திட்டத்திலும் இப்ப தெரிவுக் குழுவிற்கும் எங்கள் நிலைப்பாடாக கொடுத்திருக்கின்றோம்.  ஆனால் கூட்டமைப்பினர் மதச்சார்பற்ற நாடு தான் தங்கள் கொள்கை என்றும் ஆனால் அதனை இரண்டு பிரதான கட்சிகளும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தாங்கள் அந்த இரண்டு கட்சிகளினதும் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர் 

என்று தான் கொடுத்திருக்கின்றனர். இது வக்கில் குணம் இருக்கு தானே. அது தான் அவர்களது செயற்பாடும். நிலைப்பாடும். தெரிவுக்கழுவிலும் அதைத் தான் சொல்லியுள்ளனர். அதனையே இந்தியாவிற்கு வந்தும் கூட்டமைப்பின் நிலைப்பாடாக சொல்லியுள்ளனர். இனி இங்க வந்து அதனைத் தான் சொல்லுவினம். அத்தோடு அது தான் கூட்டமைப்பின் கொள்கை என்று தெரிவுக் குழுவிற்கு கொடுத்த போதோ அல்லது 

இந்தியாவிற்கு வந்து அக் கட்சியின் தலைவர் சொல்லியிருக்கின்ற போதும் அதனை அக்கட்சியினர் யாருமே இன்றும் மறுக்கவில்லையே. ஏன் என்றால் அது தான். உண்மை. ஆகவே தங்களது நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசிற்கு தெரியப்படுத்தியதையே இந்தியாவிலும் சொல்ல முடியுமென்றால் அதனை பகிரங்கமாக இந்த மக்கள் மத்தியிலும் வெளிப்படுத்த வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.

Radio
×