தியாக தீபன் திலீபன் நினைவேந்தல் தொடர்பில் மாநகரசபையில் தீர்மானம்!
எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நடாத்தப்படவுள்ள தியாகி திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற மாநகர சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வட கிழக்கு மூலையில் - தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தில், அவர் உயிர் நீத்த காலை 10.48 மணிக்கு அகவணக்கம் செலுத்திய பின்னர், நல்லூர் சிவன் ஆலயத்தின் பின் புறமாக - பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி நிகழ்வை நடாத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வின் போது, பொதுச் சுடரேற்றல், ஈகச் சுடரேற்றல், தியாகி திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தல் முதலியவற்றை மாவீரர் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டு செய்வது என்றும் , அதன் பின்னர் வருகை தரும் அனைவரும் எது வித பேதங்களுமின்றி மலர் சூடி அஞ்சலி செய்வதற்கு ஒழுங்குபடுத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வில் எவரெருவரும் பேசுவதற்று அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை, நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் இடம்பெறும் இடத்துக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், நிகழ்வு இடம்பெறும் நேரத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பருத்தித்துறை வீதியில் நல்லூர் சிவன் கோவிலுக்குப் பின்புறமான போக்குவரத்துக்காக மாற்றுப் பாதை ஒழுங்கை அறிவிப்பதெனவும் யாழ். மாநகர முதல்வர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.