புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், நாடு வளர்ச்சியடையாது..
தனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது உயர்ஸ்தானிகரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படவில்லை எனவும் பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையினை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வாறெனினும் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில் மக்களுக்கான சுதந்திரமும் மற்றும் அரச நிர்வாகங்களின் சுயாதீனமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் ஏற்ற காலத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்றுவரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஜப்பான் தொடர்ச்சியாக கொடுக்கும் அனைத்து ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்த இரா சம்பந்தன் விசேடமாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியின் நட்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் வேண்டும் என வலியுறுத்திய இரா. சம்பந்தன் விசேடமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஜப்பான் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ந்தும் அக்கறையோடு பங்காற்றும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.