தமிழரசு கட்சியின் காழ்ப்புணர்ச்சியினாலேயே என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது..
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் காழ்புணர்சியாலும் பழிவாங்கலாலும் உந்தப்பட்டதே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டு வழக்கில், சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சட்டத்தரணி வி.மணிவண்ணன், சுற்றவாளி என மன்றுரைத்தார். அதனால் வழக்கு வரும் ஒக்டோபர் 5ஆம் திகதிக்கு விளக்கத்துக்காக நியமிக்கப்பட்டது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரையின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது.
அந்தக் கட்சி தனது தேர்தல் அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள்.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட.ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார்.
அத்துடன், அந்தக் காலப்பகுதியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் தன்னை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜூவன் கூல் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.
முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார்.
அதனால் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக தமிழ் அரசுக் கட்சியி்ன் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் நா.லோகதயாளன் கடந்த ஜூலை மாதம் பெற்றிருந்தார்.
தனக்கு எதிரான குற்றவியல் வழக்கின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை தமிழ் அரசுக் கட்சி பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் கட்சியே இந்த வழக்கின் பிண்ணனியில் உள்ளது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரத்தினஜீவன் கூலினால் எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் தமிழரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் காழ்புணர்சியாலும் பழிவாங்கலாலும் உந்தப்பட்டதே. 07.06.2018ம் திகதி எனக்கெதிரான குறித்த வழக்கேட்டின் பிரதி தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சயந்தனால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தழிழர் விரோத சக்திகளுடன் கூட்டிணைந்துள்ள அக்கட்சி எனக்கும் என்சார் கட்சிக்கும் எதிராக எடுக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் நாம் மிகச் சாரியான திசையிலேயே பயணிக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
எனினும் எமக்கெதிராக இவர்கள் எடுத்துக்கொண்டுள்ள ஆயுதம் மிகப் பலவீனமானது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
கடந்த காலங்களிலும் நேர்மையாக செயற்பட்ட வீ.நவரட்ணம் போன்றவர்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளை தமிழரசு கட்சி செய்துள்ளது. ஈற்றில் அது எங்கு சென்று முடிந்தது என்ற வரலாற்று பாடத்தை அவர்கள் கற்க மறுக்கின்றனர் - என்றுள்ளது.
இதேவேளை, தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான வழக்குகளில் இதுவரை முற்படாமல் தவிர்த்து வந்ததாகத் தெரிவிக்கும் அவர், தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முற்பட்டிருந்தார்.
அதனால் அந்தக் கட்சியால் பழிவாங்கலுக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களான வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜி.பிரகாஷ் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோர் சார்பில் மனுத் தாக்கல் செய்து முன்னிலையாகிதாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.