"தனி ஈழம் சிந்தனை வரக்கூடாது என்றால் அநீதிகள் தொடரக்கூடாது" – சபையில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு-
நாட்டில் தனிஈழம் சிந்தனை வரக்கூடாது என்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெறக்கூடாது. அரச நிர்வாக போட்டிப் பரீட்சைகளில் தொடரந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனிஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.
அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டத்தக்கது. ஆகவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவன சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலைநாட்டு அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபை சட்டமூலம் கொண்டு வந்தமை பெரும் பாராட்டுக்குரிய விடயமாகும். 1987 ஆம் ஆண்டு மலையகத்தில் பிரதேச சபை உருவாக்கப்பட்டும் பிரதேச சபையினூடாக மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாமலும் இருந்தது. எனினும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
200 வருடங்களுக்கு பிறகு மலையகப்பகுதிகளுக்கு வீடுகள் கிடைக்கின்றமையும் பெரும் பாராட்டுக்குரியதாகும். இன்னும் பல முன்னேற்றங்கள் தேவையாகும். 1 இலட்சத்து 40 ஆயிரம் வீடுகள் இன்னும் தேவையாக உள்ளன. ஆகவே அதனை துரிதப்படுத்த வேண்டும்.
மலையக தோட்ட மக்கள் சம்பளம் போதாமல் லயன் வாழ்க்கை வாழும் நிலைமை தொடர்கின்றது. மலையக மக்களின் அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும்.
பிரதேச சபை திருத்த சட்டமூலம் மலையக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். ஆகவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஆளணி முகாமை நிறுவன சட்டமூலமும் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளணி முகாமை நிறுவகம் இனவாதம் பூசிய இயந்திரமாக இருக்கக்கூடாது. போட்டிப்பரீட்சைகளில் இனவாதம் திணிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எப்படி தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
சிங்கள மக்கள் இனவாத சிந்தனையை நீக்கி விட்டு வர வேண்டும். இலங்கை நிர்வாக மற்றும் கணக்கியல் சேவையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்றமை காரணமாக தற்போது அதற்கான நேர்முகப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் ஆயுதம் ஏந்துவதற்கும் கல்வியே காரணமாக அமைந்தது.
தமிழ் ஈழம் கோரவில்லை என அமைச்சர் திகாம்பரம் கூறினார் எனினும் நாம் தனி ஈழம் கேட்டவர்களாவர். நாட்டில் தனி ஈழம் சிந்தனை வரக்கூடாது என்றால் தொடர்ந்தும் அநீதிகள் இடம் பெறக்கூடாது. போட்டிப்பரீட்சைகளில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுமானால் தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என்றார்.