ஆவா குழுவை அடக்க இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும்..

ஆசிரியர் - Editor
ஆவா குழுவை அடக்க இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும்..

ஆவா குழு உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தில் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு 2 நாட்கள் போதும், ஆனால் சிவில் நிர்வாகத்தில் தலையிட இராணுவத் திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இன்று பலாலி படைத்தலமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் ஆவா குழு உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டு குழுக்களின் வன்முறைகள் தொடர்பாக அறிந்திருக்கிறோம். ஆனாலும் தற்போது சிவில் விடயங்களில் இராணுவத்திடம் பலம் இல்லை. 

இராணுவத்திற்கு அந்த விடயங்களிலே தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி நாங்கள் மக்களுக்கான செயற்பட்டால் இராணுவத்தின் மீது அபாண்டமான குற்றங்கள் சுமத்தப்படும் அபாயம் உள்ளது. 

இந்நிலையில் பொலிஸாரிடமே அந்த அதிகாரங்கள் பூரணமாக இப்போது உள்ளது. ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வன்முறையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதை நாங்கள் பார்கிறோம். 

இந்நிலையில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்களை அடக்குவதற்கு எமக்கு அனுமதி தாருங்கள் என ஜனாதிபதியை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவ்வாறான அனுமதி எமக்கு தரப்பட்டால் 2 நாட்களில் இந்த சிறு வன்முறை குழுக்களை அடக்குவதற்கு இராணுவத்தால் இயலும். 

ஆனால் எமக்கு அந்த அனுமதி இன்னும் தரப்படாத நிலையில் எல்லைக்குள் நாங்கள் நிற்கவேண்டிய கடப்பாடு இருந்து கொண்டிருக்கின்றது என்றார். 

Radio
×