இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவும், அவரது மகனும், இன்று காலை வாழைச்சேனைப் பொலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இன்று கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அவரது மகன் உட்பட 4 பேரையும், இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 25 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல வாழைச்சேனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.