"தமிழமுதம்" - மாபெரும் தமிழ் விழா சற்று முன் ஆரம்பமாகியது..
"நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் " என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்துகின்ற "தமிழமுதம்" - மாபெரும் தமிழ் விழா சற்று முன் ஆரம்பமாகியது.
தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து பல்கலைக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகள் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.