தியாகி திலீபன் நினைவேந்தல் நாளை காலை ஆரம்பம்! - கேளிக்கைகளை தவிர்க்குமாறு கோரிக்கை
தியாகி திலீபனின் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படும் காலத்தில் கேளிக்கைக் களியாட்டங்களைத் தவிர்த்து திலீபனின் நினைவுகளைச் சுமந்து உணர்வுபூர்வமாக நினைவேந்துவோம் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஒடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலையை நேசித்து, அதற்கு வலுச் சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து நல்லூர் வீதியில் வளர்த்த வேள்வித் தீயில் மூச்சடங்கிப் போனவன்தான் எங்கள் தியாகி திலீபன்.
தியாகி திலீபனின் ஒன்றைக் கோரிக்கை கூட இற்றைவரை நிறைவேறாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடம்படும் சூழலில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 10.10 மணிக்கு நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவி டத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
தியாகி திலீபனின் நினைவேந்தல் நடக்கும் காலத்தில் உறவுகள் கேளிக்கைக் களியாட்டங்களைத் தவிர்த்துத் தியாகி திலீபனின் நினைவுகளைச் சுமந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தாயக மற்றுமு் புலம்பெயர் உறவுகளை வேண்டி நிற்கின்றோம். திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம், திலீபனின் கனவு இன்னமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றுள்ளது.