ஆசிய வலைபந்து கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த தர்சினி சிவலிங்கம் புறக்கணிப்பா?
ஆசிய வலைபந்து கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த தர்சினி சிவலிங்கம் இல்லாத நிலையில் இலங்கை வலைபந்தாட்ட அணியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்துதித்து வாழ்த்தியுள்ளார். இந்தப் பாராட்டு நிகழ்வில் தர்சினி சிவலிங்கம் ஏன் கலந்துகொள்ளவில்லை? என்றும் அவர் புறக்கணிக்கப்பட்டாரா என்றும் ரசிகர்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது.
ஈழத் தமிழச்சியான தர்சினி சிவலிங்கம், ஆசிய வலைபந்து கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்து இலங்கைக்கு பெருமை சேர்த்தவர். அத்துடன் சர்வதேச விளையாட்டு ரசிகர்களின் கவனத்தையும் இவர் ஈரத்தவர்.
அத்துடன் சில நாடுகள் தமது நாட்டின் அணிக்காக விளையாட தர்சினி சிவலிங்கத்தை அழைத்துள்ளன. ஆசிய வலைபந்து கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தமையை பாராட்டும் நிகழ்வு தர்சினி இல்லாமல் இடம்பெற்றமை முற்றிலும் பொருத்தமற்ற செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈழத் தமிழிச்சி என்பதினாலேயே அவர் இல்லாத நிலையில் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்க செயலாகும். இதனையே ஒரு சிங்கள விளையாட்டு வீரர் என்றால் இலங்கை அரசு இவ்வாறு செய்யுமா என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
இலங்கை வலைப் பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான்.இவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை 2018 ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.அத்துடன் அவுஸ்திரேலியா கழகம் ஒன்றின் நம்பிகை நட்சத்திரமாகவும் விளங்கும் இவர் அண்மையில் அவ் அணிக்காக 91 கோல்களை ஒரு போட்டியில் மொத்த கோல்கள் (98) பெற்று கொடுத்தமையும் சிறப்பம்சமாகும்.
தர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.
இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபுவங்களை இவருக்கு கொடுத்து இருக்கின்றது.பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார்.கல்விப் பொது தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடியும் இரண்டு அங்குலமும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்.
அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.இவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.தர்சினி 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 22 வயதை அடைந்த பிற்பாடு தர்சினியின் உயரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
தர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது.ஆயினும் இங்குதான் இவரின் வலைப் பந்தாட்ட திறமை ஊக்குவிக்கப்பட்டது. கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டார்.இவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் இவரை வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது.
இலங்கை வலைப் பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு சிம்ம சொப்பனம் ஆனார்.இவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போட்டு விடுவார்.2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய வலைப் பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக வாகை சூடியது இலங்கை.இறுதிப்போட்டியில் மொத்தமாக இலங்கை அணியால் 79 கோல்கள் போடப்பட்டன. இதில் 74 கோல்களை தர்சினி போட்டு இருந்தார்.