தொல்லியல் திணைக்களத்தின் தலமை அதிகாரியாக பௌத்த பிக்கு..

ஆசிரியர் - Editor I
தொல்லியல் திணைக்களத்தின் தலமை அதிகாரியாக பௌத்த பிக்கு..

வடமாகாணத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இதேநிலை இனியும் தொடர்ந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவோம். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற மாகாணசபையின் 131வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பிரதேசங்களில் நிறுவ நினைக்கிறதே தவிர தனது வேலையை செய்யவே இல்லை. என குற்றஞ்சாட்டினார். 

இது தொடர்பாக கருத்து கூறும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தொல்லியல் திணைக்களத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றது. 

தொல்லியல் திணைக்களத்தின் தலமை அதிகாரியாக இருந்து கொண்டிருப்பவர் ஒரு பௌத்த பிக்கு என நான் அறிந்திருக்கிறேன். தலமை பொறுப்பில் சிவில் அதிகாரி ஒருவர் இருக்கவேண்டிய நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் இருப்பாரேயானால் 

அங்கு பக்கச்சார்வு இருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்து கொண்டிருக்கின்றது. இதே போல் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். 

இதனடிப்படையில் உறுப்பினர் து.ரவிகரன் கூறிய கருத்துக்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அவர்களும் இந்த விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். தொடர்ச்சியாக நாங்களும் இவ்வாறான  அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது. 

இதேநிலை தொடருமாக இருந்தால் தொல்லியல் திணைக்களத்தினை முற்றுகையிட்டு வடமாகாணசபை உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களை நடாத்தவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். இவ்வாறான எச்சரிக்கைகளை மாகாணசபையில் முன்எப்போதும் நான் கூறியதில்லை. 

ஆனால் இப்போது கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு