SuperTopAds

தமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் மீது நடவடிக்கை எடுங்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் மீது நடவடிக்கை எடுங்கள்..

முன்னாள் போராளியான குடும்பஸ்தர், அவரது மனைவி, மகள், கைக்குழந்ததை உள்ளிட்ட அனைவர் மீதும் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மீது சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர ஆகியோர் கவனத்தில் கொண்டு  தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான பே.வசந்தகுமார் என்ற குடும்பஸ்தருக்குச் சொந்தமான காணி தனியார் ஹோட்டலொன்றுக்கு 

வழங்கப்பட்டதையடுத்து குறித்த ஹோட்டல் தரப்பினருடன் அதுதொடர்பில் பிணக்கு ஏற்பட்டுள்ளது. இந்தவிடயம் சம்பந்தமாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென சிவில் உடையில் மேற்படி குடும்பஸ்தரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முதலில் அவரை கட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளர். 

அவரது மனைவி கூச்சலிட்டவாறு அங்குவரவும் அவரயும் தாக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து 14வயதேயான அவரது மகளையும் கடுமையாக தாக்கியுள்ளார். அரவது மகனையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதனால் குறித்த குடும்பஸ்தர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைகளை பெற்று வருகின்றார். 

அவரது மனைவி மற்றும் இருபிள்ளைகளும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதல் காரணமாக 14வயதான பெண்பிள்ளைக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்து சிவில் நிருவாகத்தினை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியே சிவில் உடையில் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவது எந்த வகையில் நியாயமாகும். 

இச்செயற்பாட்டினை கடுமையாக கண்டிக்கின்றேன். அத்துடன் இச்சம்பம் பொலிஸார் மீது பொதுமக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது.

இந்த விடயத்தினை பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோனை நானும் வடமாhகண சபை உறுப்பினர் தியாகராஜாவும் நேரில் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். 

அவ்விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொள்வதாக உறுதியளித்துள்ளபோதும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி என்பதால் அவர் மீது உடன் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர் அல்லது பொலிஸ் மா அதிபருக்கே உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆகவே சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்து அமைச்சரும், பொலிஸ் மா அதிபரும் எத்தகைய திர்மானங்களை எடுப்பார்கள் என்பதை உடன் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் அசமந்தமாகவோ அல்லது பக்கச்சார்பாகவே முடிவுகள் எடுக்கப்படுமாயின்  பொதுமக்களின் அபிமானத்தினை பொலிஸார் இழக்க நேரிடுவதுடன் வடமாகாண பொலிஸ் சேவையினை முற்றாக புறக்கணிக்கின்ற மனோநிலைiயும் உருவாகும் ஆபத்துள்ளது. 

ஆகவே பொலிஸ் சேவையில் நீக்கமுடியாத கறைபடிந்த விடயமாக மாறுவதற்கு முன்னதாக உடனடியாக நடவடிக்கைகளை தமதமின்றி எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.