முற்றிலும் முடங்கியது மட்டக்களப்பு மாவட்டம்! - குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் பெரு வெற்றி
மட்டக்களப்பு- பெரிய புல்லுமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் குடிதண்ணீர் தொழிற்சாலையை மூடுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் இயல்பு வாழ்வு முற்றாக முடங்கியது.
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் கடைகள் , சந்கைள், மற்றும் தனியார் அரச வங்கிகள் யாவும் மூடப்பட்டிருந்தன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. அரச அலுவலகங்கள் இயங்கவில்லை; வாகன போக்குவரத்துகள் எதுவும் இன்றி வீதிகள் வெறிச்சேடி காணப்பட்டதுடன், மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அதிகாலை மட்டக்களப்பு நகர் பகுதியில் சில வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன், வெளி மாவட்டங்களுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பஸ்வண்டிகள் மீது வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் கல்வீச்சு இடம்பெற்றுள்தாகவும் அதனையடுத்து அந்த பகுதிகளில் பொலிசார் முக்கிய சந்திகளில் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.