SuperTopAds

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு!

மட்டக்களப்பு, புல்லுமலையில் தண்ணீர் போத்தலிடும் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளை, முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியும், தமிழ் - முஸ்லிம் உறவு சீர்குலைவதைக் கண்டித்தும், “கரி நாள்” அனுஷ்டிக்குமாறு, நீதி கோரும் மக்கள் அமைப்பொன்றும், ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்துள்ளது. இதற்கான துண்டுப்பிரசுரங்கள், பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

"பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மேற்படி தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரும் ஹர்த்தாலுக்கு, பூரண ஆதரவை வழங்குங்கள்" என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலையை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், மேற்படி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது எனவும், இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று, அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத்திட்டம் அமையவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே, குடிநீர், விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறையாகக் காணப்படும் இப்பகுதிகளில், இவ்வாறான ஒரு தொழிற்சாலை அமைவது, இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் என்ற ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்வதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், மனப்பூர்வமான ஆதரவை ஹர்த்தாலுக்கு அளிப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நிலக்கீழ் நீரைப் பாதுகாக்க வேண்டியது, எதிர்காலச் சந்ததியின் தேவையோடு தொடர்புபட்டது என்பதைச' சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே, பொறுப்புமிக்க தலைவர்கள் என்ற வகையில் இதனைப் புரிந்து கொள்ளவோமாக. இக்கால, எதிர்காலச் சந்ததியைப் பாதிக்கக் கூடிய செயலை எவராக இருந்தாலும் செய்யாதிருப்போம்.

“நிலையான அபிவிருத்திகளையும், நீடித்த தொழில் வாய்ப்புகளையும் ஆதரிப்போம். அப்படியான கருமங்களை ஆற்றுவோரை வாழ்த்தி வரவேற்போம். பௌதீகச் சூழல், உயிரியற்சூழல், பண்பாட்டுச் சூழலைப் பாதிக்கும் செயற்பாடுகளை எதிர்ப்போம். அந்த எதிர்ப்பை, பிற்போக்குவாதரீதியான இன, மத, மொழி, குல எதிர்ப்பாகக் கொள்ளாதிருப்போம்” என்றார்.

நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், ஊடக அறிக்கையொன்றை, விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியபுல்லுமலை கிராமத்தில், அம்மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமைக்கப்பட்டுவருகின்ற குடிதண்ணீர்த் தொழிற்சாலையை மூடுமாறு கோரி, கடந்த பல மாதங்களாக அப்பிரதேச மக்களால் பல தடவைகளில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர் என்று, அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்த போதிலும் தொடர்ச்சியாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து வண்ணம் உள்ளதாகவும், இத்தொழிற்சாலை அப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதால், விவசாயம், விலங்குப் பண்ணை, மக்களின் குடிநீர் போன்றவற்றுக்கான நீர்த் தேவையில் நேரடியான பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்படக்கூடியதாகக் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, ஹர்த்தாலுக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், "தமிழ் மக்கள் ஆகிய நாங்கள், வீட்டுக்குள் முடங்கியவாறு, அஹிம்சைவழியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்" என, அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.