SuperTopAds

இந்த ஆண்டு இறுதிக்குள் அன்ட்டனோவ் விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும்..

ஆசிரியர் - Editor I
இந்த ஆண்டு இறுதிக்குள் அன்ட்டனோவ் விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும்..

இந்த ஆண்டு இறுதிக்குள்  தமிழகத்தின் திருச்சி, அல்லது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் அன்டனோவ்  (Antonov) தர வானூர்தி  பலாலி வானூர்தித் தளத்தில்   முதலாவதாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  வானூர்தி தரையிறங்கும் போதான  தொழில்நுட்ப பிரச்சினைகள்  குறித்து   இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.  

பலாலி வானூர்தி தளத்துக்கும், தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி வானூர்தி தளங்களுக்கும் இடையிலான தூரம் மிகக் குறைாகவே உள்ளது. இதனால் வானூர்திகள் தமது வான் பாதையிலிருந்து தாழிறங்கத் தொடங்கும் போது எந்த வானுர்தி நிலையக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை எழுந்துள்ளது. 

இந்த வானூர்திச் சேவையில் எழுந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை சிவில் வானூர்திகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் - இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான மிக முக்கிய உயர்மட்டச் சந்திப்பு நாளை வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. 

இதற்காக உயர் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து கொழும்பு வருகின்றனர். இந்தச் சந்திப்பின் பின்னர் தொழில்நுட்ப பிரச்சினைகள் தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பின் பின்னர் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும். இதேவேளை திருச்சி அல்லது மதுரையில் இருந்து ஆண்டிறுதிக்குள் பலாலி வானூர்தி தளத்துக்கு அன்டனோவ் தர வானூர்தி நிச்சயம் தரையிறங்கும் என்று இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர். 

பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னை மதுரை, திருச்சி வானூர்தி நிலையங்களுக்கு ஆரம்பத்தில் சேவை நடத்தவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய அதிகாரிகள் மூவரும், பலாலி  விமான ஓடுபாதை மற்றும் விமான நிலைய அமைவிடம் என்பன தொடர்பில் ஆராய்ந்து சென்ற நிலையில்  வானூர்திப் பாதை வரையும் பணி எற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது