வனவள திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு குறித்து தகவல் திரட்டும் குழு அமைப்பு..
வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் தற்போது வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்டவை அபகரித்து வைத்துள்ள நிலங்கள் தொடர்பில் தகவல் திரட்டி அதனை மீளப்பெறுவதற்கு குழு நியமிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில்போரின் காரணமாக 25 ஆண்டுகள் 30 ஆண்டுகளிற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்கள் இன்று மரங்களால் சூழ்ந்து காடு வளர்ந்த நிலையில் காடு என்ற காரணத்திற்காக தமது ஆளுகைப் பிரதேசம் என குறித்த திணைக்களங்கள் உரிமை கோருவதோடு அப் பிரதேசங்களிற்குள் மக்களை செல்வதற்கும் அனுமதிப்பதில்லை.
இதன் காரணமாக பல மக்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதார இடங்களையும் இழந்து வருகின்றனர்.
இவ்வாறு மக்களிற்குச் சொந்தமான நிலங்களின் விபரங்களைத் திரட்டி அந்த மக்களின் நிரங்களை அவர்களிடமே வழங்க வேண்டும் என 2016ம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புப் குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டியபோதும் அப்பணி இன்னுவரை இடம்பெறவில்லை.
இதனால் சரியான அளவு தெரியாது மாவட்ட நிர்வாகம் குறித்த திணைக்களத்திற்கும் ஏனையவர்களிற்கும் மிக சொற்ப அளவில் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக சரியான விபரத்தை திரட்டி அந்த நிலங்களை உரிய மக்களிற்கு வழங்க மாவட்டச் செயலகம் முன் வர வேண்டும்.
ஏனெனில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகையில் இருந்து அவற்றினை விடுவிக்குமாறு குறித்த திணைக்களங்களிடம் கோரப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் கடந்த யூலை மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் 7 மாவட்ட அரச அதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன் பிரகாரம் 7 மாவட்ட அரச அதிபர்களும் காணி , மீள்குடியேற்றம் , வனவளம் , வனஜீவராசிகள் , விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டனர். எனவே இது ஓர் மிக முக்கியமான கலந்துரையாடலாக அமைந்த்து.
இருப்பினும் இவ்வாறு இடம்பெற்ற சந்திப்பில் வவுனியா மாவட்டத்தில் குறித்த திணைக்களங்களின் ஆழுகையில் 75 ஏக்கர் நிலம் மட்டுமே கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது எனில் இங்கே அரச இயந்திரம் எவ்வாறு செயல்படுகின்றது. இந்த தவறிற்கு யார் பொறுப்பு கூறுவது.
உண்மையில் வவுனியா வடக்கு , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அதேபோல் செட்டிக்குளம் என சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் இவ்வாறு மக்களின் நிலம் திணைக்கள அபகரிப்பிற்குள் உள்ள நிலமையை கானப்படுகின்றது. அவற்றினை விடுவிக்க வேண்டும் .
இவற்றினை மேற்கொள்ள விளம்பரப்படுத்தி மக்களின் நிலங்கள் திணைக்களங்களின் பிடியில் உள்ளவை தொடர்பில் பதிவினை மேற்கொள்ளுமாறு பகிரங்க அறிவித்தலை விடுத்து அவ்வாறு திரட்டும் தரவின் பிரகாரம் திணைக்களங்களிடம் சமர்ப்பித்து நிலங்களை கோர வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம் இவ்வாறு தமது நிலங்களை திணக்க்களங்கள் அமகரித்து வைத்திருந்தால் பிரதேச செயலகங்கள் அல்லது கிராம சேவகர்களிடம் உடன் பதிவினை மேற்கொள்ள கோரப்பட்டது.