சுழிபுரம் பாடசாலை சிறுமி கொலை வழக்கில் சாட்சிகளான சிறுவர்களிடமும் வாக்குமூலம் பதிவு..
யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால் அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டதுடன் வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார். .
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணை அறிக்கையை மன்றில் முன்வைத்தனர்.
“ படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக இந்த நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான சிறுமி ஒருவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
எனவே அதுதொடர்பில் அந்தச் சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்படவேண்டும்.அதன்மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும். அத்துடன், குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும்" என பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதனடிப்படையில் சிறுமியை மன்றில் முற்படுத்த நீதிவான் கடந்த தவணை கட்டளை வழங்கியிருந்தார்.
அந்நிலையில் 10 வயதான கணேஸ்வரன் சர்மிளா இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அத்துடன், 7 வயதான கணேஸ்வரன் கவின் என்ற சிறுவனும் சாட்சியாக மன்றில் முற்படுத்தப்பட்டார்.
இருவரிடமும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற சமாதான அறையில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வழக்கின் முக்கிய சாட்சிகளான மற்றுமொரு சிறுவன் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் அன்றுவரை சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.