பொலிஸாருக்கு எதிராக மரத்தில் ஏறி போராடியவர் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு எதிராக மரத்தில் ஏறி போராடியவர் கைது..

கிளிநொச்சி பொலிசார் இலஞ்சம் வாங்குவதாக தெரிவித்து, நீதி அமைச்சர் , பிரதம நீதியரசர் ஆகியோருக்கு முன்னால் மரத்தில் ஏறி கவனயீர்ப்பு போராட்டம் நாடத்திய முதியவரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்துள்ளனர். 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த நீதி அமைச்சர் தலதா அத்துகோரல , கிளநொச்சி மாவட்ட நீதிபதிகள் , கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்த வேளை மேடைக்கு எதிரே நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வீதியோரமாக இருந்த மரத்தில் முதியவர் ஏறி கோசம் எழுப்பினார். 

முதியவர் மரத்தின் மீது ஏறி நின்று இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுவரொட்டியை கையில் ஏந்திய வண்ணம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக கோசம் எழுப்பினார். 

கிளிநொச்சி பொலிசார் இலஞ்சம் வாங்குவதாகவும் , தன்னை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் ஒருவர் அச்சுறுத்தி இலஞ்சம் பெற்றார் எனவும் குற்றம் சாட்டி இருந்தார். 

அதனை அடுத்து குறித்த மரத்தின் கீழ் சென்ற சட்டத்தரணிகள் , பொலிசார் முதியவருடன் சமர பேச்சில் ஈடுபட்டு அவரை மரத்தில் இருந்து இறங்கினார்கள். 

மரத்தில் இருந்து இறங்கிய முதியவரை பொலிசார் அங்கிருந்து வெளியே அழைத்து சென்று கைது செய்து பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ளனர்.

குறித்த முதியவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்ற சாட்டின் கீழ் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கைகளை பொலிசார் எடுத்துள்ளனர். 

இதேவேளை தன்னிடம் இலஞ்சம் கோருவதாக முதியவர் குற்றம் சாட்டிய கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றபட்டு உள்ளார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு