வடமாகாணத்திற்கான பூ , மரம் , விலங்கு , பறவை என்பவற்றை தெரிவு செய்ய குழு அமைக்கபட்டு உள்ளது..
வடமாகாணத்திற்கான பூ , மரம் , விலங்கு , பறவை என்பவற்றை தெரிவு செய்யவதற்கு வடமாகாண சபையினால் குழு ஒன்று அமைக்கபட்டு உள்ளது.
வடமாகாண சபையின் 130ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் ஒவ்வொரு மாகாண அரசும் தங்களுக்கான பூ , மரம் , பறவை, விலங்கு என்பவற்றை தெரிவு செய்துள்ளனர்.
வடமாகாண சபை உருவாக முதல் வடக்கு மாகாணத்திற்கு என மரமாக மருத மரமும் , பூவாக வெண் தாமரையும் , பறவையாக புலுணியும் , விலங்காக ஆண் மானும் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இவை மாகாணத்தின் சிறப்புக்களை பிரதி பலிப்பதாக இல்லை.
எனவே மாகாண சபை உறுப்பினர்கள் , துறை சார் அறிஞர்கள் , பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தி , தேவை ஏற்படின் அவற்றை மாற்றம் செய்து , வடமாகாணத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாக பழம் ஒன்றினையும் தெரிவு செய்ய வேண்டும் என தீர்மானத்தை முன் மொழிந்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா , இதனை சபையில் தீர்மானமாக நிறைவேற்றி பயனில்லை. மாகாண சபையால் அங்கிகரீக்கபட்டு , அரசிதழாக (வர்த்தமானி) வெளியிடப்பட வேண்டும். என தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் , சி.வீ.கே.சிவஞானம் வடமாகாணத்திற்கான பறவை , மரம் , விலங்கு , பூ , பழம் என்பவற்றை தெரிவு செய்வதற்கு தன்னுடன் , ஆளும் கட்சி உறுப்பினர்களான சபா. குகதாஸ் , பொ. ஐங்கரநேசன் , த. குருகுலராஜா , பா. அரியரட்ணம் , எதிர்கட்சி உறுப்பினர்களான அலிக்கான் சரிப் மற்றும் ஜெயதிலக ஆகியோரை உள்ளடக்கி குழு ஒன்றினை அமைத்துள்ளார்.
அதேவேளை வடமாகாண சபையின் ஆயுள் காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.