30 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த மயிலிட்டி மகாவித்தியாலயம் மீள்கிறது..
மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியால் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி பாடசாலை (மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம்) அடுத்த வார இறுதியில் விடுவிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இப்பகுதியில் மக்கள் மீள்குடியமர்வுக்கு இந்த பாடசாலையினை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினை அழைத்து பேசிய ஜனாதிபதி பாடசாலை குறித்து விசாரித்ததுடன் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி பாடசாலையில் உள்ள இராணுவ தளபாடங்கள் மற்றும் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் கலந்துகொண்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்காவுடன் உரையாடிய அரச அதிபர் நா.வேதநாயன் இப்பாடசாலை விடுவிப்பு தொடர்பில் பேசினார்.
இதன்போது பாடசாலையினை விடுவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் அடுத்தவார இறுதியில் அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.