SuperTopAds

வடமாகாணத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது..

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 34 பிரதேச செயலாளர் பிரிவுகள் 2019ம் ஆண்டு முதல் 38 பிரதேச செயலகங்களாக அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் மற்றும்  ஆளணி அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மாவட்டச் செயலாளர்களிற்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தின் தற்போதைய 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாற்றப்பட்டு அடம்பன் வடக்கு என்னும் புதிய பிரதேச செயலகம் 16 கிராம சேவகர் பிரிவுகளுடன் உருவாக்கப்படுகின்றது. 

இதன் பிரகாரம் தற்போது  49 கிராம சேவகர் பிரிவுகளுடன் இயங்கும்  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு  38 கிராம சேவகர் பிருவுகளுடன் இயங்கும். 

யாழ்ப்பாண மாவட்டத்தின்  மிகப் பெரிய நிலப்பரப்பினையும் அதிக கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு  இரு பிரதேச செயலகங்களாக பிரித்து சாவகச்சேரி , கொடிகாமம் என இரு பிரதேச செயலகங்களாகவும் இயங்க அனுமதிக்கப்படுகின்றது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவினை இரண்டாக பிரித்து கரைச்சி மற்றும் அக்கராயன் என இரு பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரித்து அந்த மாவட்டத்தின் 4 பிரதேச செயலகங்கள் 5 பிரதேச செயலகங்களாக இயக்கப்படவுள்ளது.

இதேநேரம்  வவுனியா மாவட்டத்தின் தற்போதைய 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஓமந்தை புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு தனியான பிரதேச செயலாளர் பிரிவாக இயக்குவதன் மூலம் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளாக அதிகரிக்கின்றன. 

இவ்வாறு புதிதாக உருவாக்கப்படும் ஓமந்தை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 21 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கப்படுகின்றன.

குறித்த விபரங்கள் கடந்த வாரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற மாவட்ட அரச அதிபர்களிற்கான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் வடக்கு மாகணத்தில் தற்போது கானப்படும் 34 பிரதேச செயலகங்கள்ல2019ம் ஆண்டு முதல் 38 பிரதேச செயலகங்களாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.