வடமராட்சி கிழக்கில் தமிழ் மீனவர்களின் 12லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுப்பு..
வடமராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கடலட்டைத் தொழிலிலை நிறுத்துவதாக மீன்பிடி அமைச்சர் தெரிவித்த கூற்றின் பின்னர் உள்ளூர் மீனவர்களின் 12 லட்சம் ரூபா பெறுமதியிலான வலைகள் அறுத்தெறியப்பட்டுள்ளதாக வடமராட்சி மீனவர் சங்க சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் பகலில் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த காலத்திலேயே எமக்கு அதிக இடையூறுகள் அதாவது 5 கிலோ மீற்றருக்கும் உட்பட்ட பகுதிகளில் தொழிலில் ஈடுபடுவது சென்று வரும்போது சுழியோடிகள் கடலில் எமது வலையை அறுப்பது என நாம் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தோம்.
இந்த நிலையிலேயே போராட்டங்களின் பின்னர் அமைச்சரின் ஓர் உத்தரவின் பிரகாரம் அண்மையில் 27 படகுகள் இரவில் தொழில் புரிந்த நிலையில் பிடிக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டது. ஆனால் இரவில் தொழில் புரியவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டமை அன்றுதான் தெரியவந்தது.
இதனையடுத்து 22ம் திகதி யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி முன்பாக போராட்டம் நடாத்த முடிவெடுத்தோம். இதனால் அதற்கு முதல்நாள் கடற்றொழில் அமைச்சர் எம்முடன் பேசினார். இதன் பிரகாரம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடல் அட்டை பிடிப்போரை முழுமையாக அகற்றுவதாக வாக்குறுதியளித்தார்.
இந்த நிலையில் 22ம் திகதி இரவு எமது தொழிலாளர்களின் கண்முன்பாகவே சுழியோடிகள் 6 வலைகளை அறுத்து எறிந்தவாறு தொழிலில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் அமைச்சரின் கூற்றிற்கு என்ன நடவடிக்கை என்பதற்காக பொறுமை காத்துள்ளோம்.
இதற்காக எமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறுகோரி சமாசத்தின் சார்பில் 23ம் திகதி கடிதம் மூலம் மாவட்ட பிரதிப் பணிப்பாளரிடம் எமது கோரிக்கையினை சமர்ப்பித்தோம்.
குறித்த கோரிக்கை கடித்த்திற்கு அமைய உடன் எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடரபில் இன்றுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கனிதம் வழங்கிய பின்பும் இரு தடவைகள் எமது வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் ஏனைய சங்கங்களையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் குதிப்பதனைத் தவிர வேறுமார்க்கம் இல்லை. இதற்கான அடுத்த கட்டம் தொடர்பில் தற்போது ஆராய்கின்றோம் .
இவ்வாறு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பிலும் அமைச்சரின் வாக்குறுதி தொடர்பிலும் அறிந்துகொள்ள தற்போது நேரடியாகவே அமைச்சைத் தொடர்பு பொண்டோம். அதன்போது அமைச்சின் செயலாளர் மாற்றம் காரணமாகவே எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.
எனப் பதிலளிக்கின்றனர். இதனால் ஓர் இரு நாட்களில் பகிரங்க அறிவித்தலுடன் தொடர் போராட்டம் இடம்பெறும். என்றார்.