பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட மாணவனுக்கு வீடு கொடுத்த பொலிஸார்..
யாழ்ப்பாண பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களில் ஒருவரான நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டு உள்ளது.
கிளிநொச்சியில் உள்ள கஜனின் குடும்பத்தினருக்கு மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட வீட்டினை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று புதன்கிழமை காலை கஜனின் தாயாரிடம் கையளித்தார்.
வீட்டினை கையளித்த பின்னர் உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் இந்த வீடு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கஜனின் இழப்புக்கு ஈடாகாது. இருப்பினும் நாம் அப்போது பிரதமருடன் பேசி குடும்மத்தினருக்கு வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக இந்த வீட்டினை அமைத்துக் கொடுத்துள்ளோம்.
இந்த வீட்டினை இராணுவத்தினர் மிகவும் சிறப்பாக அமைத்து கொடுத்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
பின்னணி..
யாழ்.பல்கலைகழக மாணவர்களான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் விஜயகுமார் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் வைத்து யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கு கோவைகள் கையளிக்கப்பட்டு உள்ளன. அந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து மூன்று பொலிசார் விடுவிக்கப்பட்ட நிலையில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.