இராணுவம் செய்ததை இன்று அரச திணைக்களங்கள் செய்கின்றன..

ஆசிரியர் - Editor I
இராணுவம் செய்ததை இன்று அரச திணைக்களங்கள் செய்கின்றன..

வடக்கு கிழக்கில் இராணுவம் நிலம் பிடிக்கும் செயற்பாடு குறைந்துள்ளபோதும் அரச திணைக்களங்கள் ஊடாக  நிலம் பிடிக்கப்படுவதோடு ஒரு பௌத்தர்கள் எனும் வாழாத திருக்கேதீஸ்வரம் , கொக்குளாய் பகுதிகளில் விகாரை அமைப்பதுதான் இந்த அரசின் சாதனைகளா?

 என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்படி கேள்வியை எழுப்பினார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரிக்கையில் ,

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி இடம்பெறுவதாக காட்டும் தேவைப்பாடு அரசிற்கு உண்டு. அந்த அபிவிருத்திகளிற்கு வரும் அனைவரும் பல வாக்குறுதிகளையும் வழங்குகின்றனர். ஆனால் எவையும் நிறைவேற்றப்படுவது கிடையாது. 

உண்மையில் ஜனாதிபதி , பிரதமர் தற்போது வடக்கு கிழக்கிற்கு படை எடுக்கின்றனர். பல திட்டங்களை பார்வையிடுகின்றனர். வாக்குறுதியளிக்கின்றனர். அவர்களிற்கு இங்கே அபிவிருத்தி இடம்பெறுவது தொடர்பில் சர்வதேசத்திற்கு எடுத்தியம்பும் தேவை உள்ளது. 

அதேநேரம் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரைவாசிப் பிரதேசம் மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அரச நிலம் பிரதேச செயலாளரின் கீழ் உள்ளது. ஆனால் மாவட்டச் செயலகம் அமைந்துள்ள பிரதேசமே மகாவலியின் கீழ் சென்றுவிட்டது. 

1985 ம் ஆண்டு முல்லைத்தீவின் பெரும்பகுதி மகாவலியின் கீழ் வருவதாக கூறப்பட்டு இன்றுவரை ஒரு சொட்டு நீர்கூட முல்லைத்தீவினை எட்டியும் பார்க்கவில்லை. அதனை அந்த மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அங்கே நீர் வந்தாலும் கிடைக்கும் நன்மையை விடவும் அதனால் ஏற்படும் அபாயகரமான சிங்களக் குடியேற்றத்தை எண்ணியே அஞ்சுகின்றனர். 

இவ்வாறு நீரே கிடைக்காத 30 ஆண்டுகளில் பெரும்பகுதி நிலம் சிங்களக் குடியேற்றத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் என கபளீகரம் செய்யும் நிலையில் ஒரு தமிழனுக்கேனும் இந்த மகாவலி அதிகார சபை இன்றுவரை காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதாக நாம் இன்றுவரை அறிந்த்தே கிடையாது. 

அதேபோன்று தமிழ் மக்களின் நிலங்களை படையினர் ஒருபுறமு் வனவளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் ஒரு பக்கத்தால் ஆக்கிரமித்த நிலையில் தற்போது தொல்பொருள் திணைக்களமும் அந்தப்படியில் மூச்சுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. 

இந்த திணைக்களம் ஏற்கனவே முல்லைத்தீவில் கொக்குளாயில் உள்ள பிள்ளார் ஆலயப்பகுதி தொல்லியல் என்றனர் அங்கே விகாரை அமைக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் தொல்லியல் என்றனர் விகாரை அமைக்கப்படுகின்றது.

தற்போது வவுனியாவில் ஆதிலிங்கேஸ்வர்ர் ஆலயப்பகுதி தொல்லியல் என்கின்றனர். அடுத்தது அங்கும் பெளத்த விகாரைதான். நாம் விகாரைக்கு எதிரானவர்களோ அல்லது நாட்டில் அமைக்கப்படும் விகாரைகளிற்கு எதிரானவர்களோ அல்ல. மாறாக ஒரு பௌத்தன்கூட வாழாத எமது பிரதேசத்தை ஆக்கிரமித்து விகாரை அமைப்பதனையே எதிர்க்கின்றோம்.

 இவற்றினை நாம் நீண்டகாலமா எடுத்துக் கூறினால் அதிகாரிகளிடம் உரையாடுமாறு கூறுகின்றீர்கள். அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் உங்களை கை காட்டுகின்றனர்.

இதன் காரணமாக அமைதிக்காக நாம் தொடர்ந்தும் பேசாது இருக்க முடியாது. எனவே நாம் இவற்றினை மக்கள் முன்பாக பகிரங்கமாகவே இனிக்கூறவேண்டிய நிலமை ஏற்படுகின்றதோடு போராட்டங்களிற்கும் இட்டுச் செல்லும் நிலமை ஏற்படும் என ஜனாதிபதியிடம் கூறியதனையடுத்து ஜனாதிபதி தனது அமைச்சின் இராஜாங்க அமைச்சரை அழைத்து இதற்கு தீர்வு கானுமாறு கூறியிருந்தார். 

இதே நேரம் குறித்த விடயத்தின் சாராம்சம் நாடாளுமன்ற உரையிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு