தெல்லிப்பழை துர்க்காதேவி சப்பறத் திருவிழாவில் அணிவகுத்த கற்பூரச் சட்டிகள் VIDEO

ஆசிரியர் - Admin

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று புதன்கிழமை(22) இரவு களைகட்டியது.

இன்று பிற்பகல் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்காதேவி, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்வீதி வலம் வந்தனர்.

அதனைத்தொடர்ந்து இரவு- 07 மணியளவில் துர்க்காதேவி, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் சப்பறத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து அந்தணச் சிவாச்சாரியார்களின் விசேட தீபாராதனை இடம்பெற்றது.

தொடர்ந்து அடியவர்கள் அரோகராக் கோஷம் முழக்கத்துடன் தெய்வத்திருமுறை பண்ணோடு பாடிப்பரவ, மங்கள வாத்தியங்கள் ஓசை எழுப்ப சப்பறத் திருப்பவனி ஆரம்பமாகியது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பறத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அலங்கார நாயகியாகத் துர்க்காதேவி வீதி வலம் வந்த காட்சி அற்புதமானது.

சப்பறத் திருப்பவனி வீதி வலம் வந்த போது சப்பறத்தின் இரு மருங்கிலும் பெண்கள் நீண்ட வரிசையில் தமது கைகளில் கற்பூரச் சட்டி ஏந்தி வந்து நேர்த்தியுடன் நேர்த்திக்கடன் நிறைவேற்றிய காட்சி பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் தமக்குச் சிறந்த வாழ்க்கைத்துணை அமைய வேண்டுமென வேண்டியும், திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டியும்,பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டியும்நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

அத்துடன் பல ஆண் அடியவர்கள் பறவைக்காவடிகள், தூக்குக் காவடி என்பன எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இரவு -08 மணியளவில் சப்பறம் மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு