யாழிலிருந்து வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு பணிப்பு..
வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து அட்டைத் தொழிலில் ஈடபடும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா நேற்றிரவு அதிகாரிகளுக்கு அதிரடி பணிப்புரை விடுத்தார்.
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் கடற்படையினருடைருக்கு அறிவித்து வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்குமாறும் அவர் அமைச்சு அதிகாரிகளைப் பணித்தார்.
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி இன்று ஆரம்பித்து வைக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க கடற்றொழில் அமைச்சர் நேற்று யாழ்ப்பாணம் வந்தார்.
இந்நிலையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை நகரில் உள்ள விடுதியொன்றில் அமைச்சர் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
இதன்போது வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் இடபடுவதால் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து யாழ்.கடற்தொழிலாளர் பிரதிநிதிகள் அமைச்சருக்கு எடுத்துக் கூறினர்.
இதேவேளை, இரவு 8 மணியளவில் அமைச்சரை வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகள் சந்தித்தப் பேசினர்.
தமது பகுதிகளில் இரு பெரிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த முதலாளிகள் தங்கியிருந்து செய்யும் சட்டவிரோத தொழில்கள் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த இரு பெரும் முதலாளிகளால் ஆயிரக்கணக்கான உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாரிய வெளிச்சம் பாய்ச்சி அவர்கள் இரவில் சட்டவிரோத கடற்றொழில் முறைமைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
இதனால் மீன் வளம் முழுiயாக அழிவடைகிறது.
இதனைவிட உள்ளுர் மீனவர்களின் வலைகளை அவர்கள் அறுப்பதால் தொடர்ந்து நாங்கள் பாதிக்கப்படுகிறோம் எனவும் அமைச்சரிடம் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனைவிட அதிகாரிகள் மற்றும் சில தரப்பினர் சட்டவிரோத தொழில்களுக்குத் துணை போகின்றனர்.
சட்டவிரோத தொழில் ஈடுபட்டபொது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 81 பேரையும் அவர்களின் 29 படகுகளையும் யாழ்;.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உயரிதிகாரி ஒருவர் தலையிட்டு விடுவித்ததையும் அவர்கள் அமைச்சருக்குக் கூறினர்.
எனவே, வெளிமாவட்ட மீனவர்களை அகற்ற உனடடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விளக்கங்களைக் கேட்ட அமைச்சர், வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தங்கியிருந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றப் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, அமைச்சரின் இந்த உத்தரவை அடுத்து இன்றைய ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் முடிவை யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.