SuperTopAds

வடமாகாணசபையின் வினைத்திறனற்ற செயற்பாட்டையே கூறிவருகிறேன்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபையின் வினைத்திறனற்ற செயற்பாட்டையே கூறிவருகிறேன்..

மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளை நான் 2014 முதல் தொடர்ச்சியாக எடுத்துக் கூறிவருகின்றேன். 

அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைக்குரிய முக்கிய வகிபாகம் நிறைவேற்று செயற்பாட்டிற்கு பொறுப்பாக இருக்கும் முதலமைச்சரும் அமைச்சரவையும் மாகாண சபைக்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்பதாகும்.

இதன் அடிப்படையில் சபையில் என்னால் கேட்கப்படும் கேள்விகளிற்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ  பொறுப்பாக பதில் வழங்குவது கிடையாது. 

மேற்கண்டவாறு வடமாகாணசபை எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த நிலையில் மக்களிற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்ற முறையில் மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளை ஊடகங்கள் வாயிலாக மக்களிற்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையெனக் கருதி  செயற்படுகின்றேன்.  

இதனைத் தேர்தலை நோக்காக கொண்டது எனக் கூற முனைவது இயலாத் தன்மையை மூடி மறைப்பதற்கான வர்ணம். 

டெனீஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை பிறப்பித்த நாள் முதல் முதலமைச்சர் வழமைபோல் தொடர்ச்சியாக வழக்கின் கட்டளை தொடர்பில் பொய்யான தகவல்களை ஊடகங்களின் கேள்விகளிற்குப் பதில் என்ற போர்வையில் தானே கேள்வி கேட்டு பரப்புரை செய்துள்ளார். 

பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் உண்மையை மக்களிற்கு தெரியப்படுத்தவே குறித்த வழக்கின் உண்மை விபரத்தைப் பகிரங்கப்படுத்தினேன். 

வடக்கு மாகாண சபையில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கூட முதலமைச்சர் உண்மையை உரைக்கவில்லை. இதில் முக்கிய விடயம் இவ் வெற்றிடத்தை யார் நிரப்புவது, எவ்வாறு நிரப்புவது என்பது அல்ல. 

மாறாக இவற்றினை நிரப்புவதற்கு மாகாண சபை எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன என்பதே ஆகும். எனது இக் கூற்றின் நியாயத் தன்மையை 'இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபையினால்  அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை நிரூபிக்கின்றதாக அமைகின்றது.

உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் 30.06.2018 அன்று பாடசாலைகள் தவிர்ந்த வடக்கு மாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களாவன, சிரேஸ்ட நிலை 590, மூன்றாம் நிலை 123, இரண்டாம் நிலை 4,672, ஆரம்ப நிலை 2,063, சேவை நிலை குறிப்பிடாதவர்கள் 62 பேர் என மொத்தமாக 7,510 ஆகும். 

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4,791 ஆக இருந்த இவ் வெற்றிடப் பட்டியல் 2016 டிசம்பரில் 2,957 ஆகக் குறைந்து இன்று 7,510 ஆக உயர்வடைந்துள்ளது. 2015 டிசம்பரிலிருந்து 30.06.2018 வரை இரண்டாம் நிலையில் 2,742 நியமனங்களும் ஆரம்ப நிலையில் 189 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட நிலை மற்றும் மூன்றாம் நிலை அதிகாரிகள் மற்றும் இரண்டாம்  நிலை அலுவலர்களில் சில சேவைகளைச் சேர்ந்தவர்கள். (உ.ம். தாதிகள், துணை மருத்துவ சேவை வகுதியினர்) மத்தியினால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டியவர்கள். 

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மத்தியினால் ஆட்சேர்ப்புச் செய்யப்படல் வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யவில்லை  என அவர்கள் மேல் குற்றம் சுமத்தி விட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. 

எம் மக்கள் மீது நாம் உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் இவ் வெற்றிடங்களை நிரப்புமாறு அதற்கான நியாயப்பாடுகளுடன் தொடர்ச்சியான அழுத்தங்களை மத்தியின் சம்பந்தப்பட்ட அமைச்சுகளிற்குக் கொடுத்திருத்தல் வேண்டும். 

அவ்வாறாக நியாயப்பாடுகளுடனான அழுத்தங்களை முதலமைச்சர் அல்லது ஏனைய அமைச்சர்கள் பிரயோகித்தமைக்கான ஆதாரங்களாக கடிதங்களை அல்லது கூட்ட அறிக்கைகளினை அவர்களினால் சமர்ப்பிக்க முடியுமா? என வினவ விரும்புகின்றேன். 

சில வெற்றிடங்கள் தகுதியான விண்ணப்பதாரிகள் இன்மை காரணமாக நிரப்பப்படவில்லை என்பதனையும் நியாயபூர்வமான கருத்தாக ஏற்றுக் கொள்ளலாம். 

இவை தவிர, ஏனைய 3,009 வெற்றிடங்கள் நேரடியாக மாகாண சபையினால் நிரப்பப்பட வேண்டியவை. துறைசார் திணைக்களங்களிற்குரிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் தயாரிக்கப்படாமையினாலும், மாகாண சபையின் அசமந்தப் போக்கினாலும் இவை நிரப்பப் படவில்லை. 

வடக்கு கிழக்கு ஒன்றாக இருந்து வடக்கு மாகாணம் தனி மாகாணமாக உருவாக்கப்பட்டதன் பின்பு இரண்டாம் நிலை, ஆரம்ப நிலைகளிற்கான சில துறை சார் ஊழியர்களின் சேவைப் பிரமாணக் குறிப்புகளினை இன்னும் வடக்கு மாகாணத் திணைக்களங்கள் ஆக்கவில்லை. வடக்குமாகாண சபையின் செயற்றிறனின்மையே இதற்குரிய காரணம்.